கரூர் அரசு மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவமனைpt web

LIVE : TVK Vijay Campaign | கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழப்பு.. தொடர் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு

கரூர் தவெக பரப்புரையில் கலந்துகொண்டவர்களில் தற்போது 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கரூரில் பரபரப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், அதன்பிறகு சாலை மார்க்கமாக நாமக்கல் வந்தடைந்தார். அங்குள்ள சேலம் சாலை பகுதியில் காலை 11 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், வழியெங்கும் இருந்த மக்கள் திரள் காரணமாக பிற்பகல் 2.30 மணியளவில்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து கரூர் செல்லும் விஜய், வேலுசாமிபுரம் பகுதியில் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். விஜயின் பரப்புரைக்காக ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக செய்து வரும் நிலையில், காவல் துறையினர் தரப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பரப்புரைக் கூட்டத்தில் பேசிய விஜய்

போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கலும், முட்டையும் ரொம்ப ஃபேமஸ்; தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இதுதான்;

அண்ணன் கேப்டன் பேசிய, ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்

தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் அவர்கள்..

இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே... செஞ்சாங்களா?

வாக்குறுதி எண் 50: ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும்

வாக்குறுதி எண் 66: கொப்பறை தேங்காய்களை, அரசே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணைய்யை உற்பத்தி செய்து நியாயவிலை கடைகளில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை

வாக்குறுதி எண் 68: நியாயவிலை கடைகளில் நாட்டுச்சக்கரை, வெல்லம் விநியோகிக்க நடவடிக்கை

வாக்குறுதி எண் 152: போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம்

இதையெல்லாம் சொன்னார்களே... செய்தார்களா?

நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை, ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை

திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமுடைய கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லை சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளர்கள் என சொல்லப்படுகிறது. இத்திருட்டுக்கு கந்துவட்டி கொடுமைதான் ஆரம்ப புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்றாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் தண்டிக்கப்படுவர்

விசைத்தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து, எங்கள் தேர்தல் அறிக்கையில் செல்வோம்... சாரி சொல்வோம்

கரூர் அரசு மருத்துவமனை
’சும்மா தெரியாம உளராதீங்க அண்ணா..’ கரூரில் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட திமுக போஸ்டர்கள்!

மக்கள் கேட்பது என்ன?

சுற்றுப் பயணத்தின்போது செல்லும்போது மக்கள் தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறார்கள். சாலை வசதி, குடிக்க நல்ல குடிநீர், நல்ல மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு இந்த அடிப்படை விஷயங்களைத்தான் மக்கள் கேட்கிறார்கள்.

NGMPC059

விஜய் கேள்வி மட்டுமே கேட்கிறார். இவர் வந்தால் என்ன செய்வார் என கேட்கிறார்கள். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என சொன்னோம். இதைத்தானே எல்லோரும் சொல்கிறார்கள் என சொல்கிறார்கள். அதைத்தானே இதையும் சொல்கிறார்.. புதிதாக எதையும் சொல்லவில்லையே என்கின்றனர். ஒரு மனிதனுக்கு சாப்பிட நல்ல உணவு, நல்ல குடிநீர், கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பான வாழ்க்கை இதுதானே மனிதனுக்கு அடிப்படை தேவை. அதை சரியாக செய்வோம் என சொல்வதுதானே சரி..

திமுக போல் பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்க மாட்டோம். புதிதாக சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வது.. எனக்கு எதுவும் புரியவில்லை. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடிப்பாதை போடப்படும், வீட்டிற்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என அடித்துவிடுவோமா? நம் முதலமைச்சர் அடித்துவிடுவாரே அப்படி அடித்து விடுவோமா?

திமுக போல பாஜகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங்-ல் இருக்க மாட்டேன்

பாசிச பாஜகவுடன் எப்போதும் ஒத்துப்போகமாட்டோம். திமுகபோல் அண்டர் கிரவுண்ட் டீலிங், மறைமுக உறவு என பாஜகவுடன் எப்போதும் இருக்கமாட்டோம். மூச்சுக்கு முந்நூறு முறை அம்மா என சொல்லிக்கொண்டு, பொருந்தா கூட்டணியை அமைத்துக்கொண்டு – கேட்டால் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி என சொல்லிக்கொள்கிறார்களே அவர்கள்போலும் நாம் இருக்க மாட்டோம். இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது. நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான நிதியை முழுதாக கொடுத்தவிட்டார்களா? பின் எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை.. எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.

திமுக - பாஜக மறைமுக உறவு

இன்னொரு முக்கியமான விஷயம்.. அதிமுக பாஜக நேரடி உறவுக்காரர்கள் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள்மேல் மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆனால், திமுக குடும்பம் பாஜகவுடன் மறைமுக உறவில் இருக்கிறார்கள். தயவு செய்து மறந்துவிடாதீர்கள். வரும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அது பாஜகவுக்கு வாக்களித்த மாதிரி.

2026-ல் தவெக Vs திமுக-தான்; இதில் தவெக மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாய் களத்தில் இருக்கும் தவெக. இன்னொன்று கொள்கை என்ற பெயரில் மக்களையும் தமிழ்நாட்டையும் ஏமாற்றும் திமுக

இந்த இரு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் 2026-ல் போட்டியே; மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக வேண்டுமா அல்லது உண்மையான மக்களாட்சியை கொடுக்கப்போகும் தவெக மறுபடியும் ஆட்சியமைக்கணுமா? சாரி... தவெக இப்போ ஆட்சியமைக்கணுமா..

பேச்சில் தடுமாறிய விஜய்.. 

இன்றைய நாமக்கல் பரப்புரையின்போது பல இடங்களில் தடுமாறி பேசிய தவெக தலைவர் விஜய், உரையை முடித்தபின் “சாரி, நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன்பின் சற்று வித்தியாசமாக இருந்தது; அந்த ரிதமை பிடிக்க சற்று நேரமாகி விட்டது; நன்றி” எனக்கூறி அங்கிருந்து சென்றார்

முன்னதாக இன்றைய பேச்சின்போது மருத்துவ வசதி, அமைக்க வேண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்டுள்ளனர் போன்ற பல வார்த்தைகளை சொல்ல தடுமாறினார் விஜய்

கரூரில் மின்தடை

கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்தில், தாழ்வாக சில இடங்களில் மின்கம்பிகள் செல்வதால் மின்தடை செய்யப்படும் என மின்வாரிய பணியாளர்கள் வேலுசாமிபுரம் பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

கரூரில் விஜய்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் பேசத்தொடங்கிய விஜய், “கரூர் அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஒரு ஊர். இங்கு மிக முக்கியமாக டெக்ஸ்டைல் மார்க்கெட் மிக ஃபேமஸ். இப்படி கரூரைப்பற்றி பெருமையாகச்சொல்ல ரொம்ப விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய சூழலில் கரூர் என்று சொன்னாலே ஒரே ஒரு பேர் தான் மிக ஃபேமஸாக ஜொலிக்கிறது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்தார்களே.. அதை முதலில் பார்த்துவிடலாம்.

கரூர் மாவட்டத்தில் பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.. பேரிச்சை வளர்க்க நிதியுதவி வழங்கப்படும் என்றார்கள். வாக்குறுதி 81. பேரிச்சை மரத்தை விடுங்கள். பேரிச்சை விதையையாவது கண்ணில் காட்டினார்களா? துபாய் குறுக்குச்சந்து கதைதான்.

கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். வாக்குறுதி எண் 448. ஆட்சியே முடியப்போகிறது. இப்போது சென்று ஒன்றிய அரசிடம் அமைச்சர் கோரிக்கை விடுக்கிறார். அய்யா அமைச்சரே இதுதான் உங்கள் டக்கா? ஏர்போர்ட் வந்தால் ஜவுளி தொழில் இன்னும் ஏற்றம் பெறும் என்பது உண்மையான விஷயம்தான். அதேநேரத்தில், மக்கள் பாதிக்காத வண்ணம் இடங்களை தேர்வு செய்து ஏர்போர்ட் கட்ட வேண்டும்.

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டதோடு அல்லாமல், சட்டவிரோத கல்குவாரிகள் கரூரிந் கனிம வளத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார் சிஎம் சார். 11 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டால் 11.5 மணிக்கு மணல் கொள்ளை அடிக்கலாம் என வெளிப்படையாக சொன்னவர்கள் தானே உங்களது ஆட்கள்.

மணல் கொள்ளை அடிப்பவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்

2026ல் மணல் கொள்ளை அடிக்கிறவர்களிடம் இருந்து வரும் பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைப்பவர்களிடம் இருந்து காவிரித் தாய்க்கும், கரூருக்கும் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய ஏரி இங்கிருக்கும் பஞ்சபட்டி ஏரி. அந்த ஏரியின் பரப்பளவு 1000 ஏக்கருக்கும் மேல். அந்த ஏரி நன்றாக இருந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். விவசாயம் செழிப்பாக இருந்தால் பல லட்சம் குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கும். ஆனால் பல வருடமாக அதை சீர் செய்யாமல், அதற்கு தண்ணீர் வர வழியில்லாமல் செய்து வைத்திருக்கிறார்கள். நம் ஆட்சி, அதாவது உங்கள் ஆட்சி வரும்போது உங்கள் முகத்தில் சிரிப்பு சந்தோஷம் மீண்டும் வரும்.  

ஜவுளி தொழில் கரூரை வளர்த்தெடுக்கிறது.. இருந்தாலும், மக்கள் பாதிக்காத வண்ணம் ஜவுளித்தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எந்த அரசும் எடுக்கவில்லை. நாம் அவற்றை முன்னெடுப்போம்.

கரூர் வரை வந்துவிட்டு அப்பிரச்னைகளுக்கு காரணமானவரை பற்றி பேசாமல் போனால் நன்றாக இருக்காது அல்லவா? கரூர் மாவட்டத்தில் தற்போது இருப்பவர் மந்திரி அல்ல.. ஆனாலும், மந்திரி மாதிரி. சமீபத்தில் கரூரில் விழா ஒன்று நடத்தினார்களே. முப்பெரும் விழா.. அப்போது முதலமைச்சர் முன்னாள் அமைச்சரைப் பற்றி உச்சிமுகர்ந்து பாராட்டினாரே? இதே சிஎம் எதிர்கட்சியாக இருந்தபோது கரூருக்கு வந்தார். அப்போது அந்த முன்னாள் முதலமைச்சரைப் பற்றி என்னெவெல்லாம் பேசினார். திமுகவுக்கு இந்த முன்னாள் அமைச்சர் என்னவாக இருக்கிறார் என்று மக்கள் எப்படி பேசுகிறார்கள் தெரியுமா? திமுக குடும்பத்துக்கு ஊழல் செய்யும் பணத்தை எல்லாம் 24x7 கொடுக்கும் ஏடிஎம் மிஷினாக இருக்கிறாராம்.  இப்படி நான் சொல்லவில்லை ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

இங்கு காவல்துறையினரின் பாதுகாப்பு எல்லாம் இருக்கிறதா இல்லையா? காவல்துறையினரின் கைகள் எல்லாம் கட்டப்பட்டுள்ளது என நினைக்கிறேன். போலீஸ் சார் மக்கள் மட்டும்தான் எஜமானர்கள். இன்னும் 6 மாதம் தான். ஆட்சி மாறும்.. காட்சி மாறும். உண்மையான மக்களாட்சி அமையும். அப்போது, தெரியும்.. எல்லோருக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் 100% கிடைக்கும்.

15க்கும் மேற்பட்டோர் 

விஜய் பரப்புரையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக  ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் மயக்க நிலையில் கரூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் போன்றோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதலமைச்சரின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் பலரும் கரூர் மாவட்டத்திற்கு விரைந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

10 பேர் கவலைக்கிடம்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையி; நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக 15க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மயக்கமடைந்தனர். பலரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மருத்துவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், 10 பேர் கவலைக்கிடம் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காக்க மருத்துவர்களும் செவிலியர்களும் போராடி வருகின்றனர். கரூர் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் போன்றோர் ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்தவண்ணமே உள்ளன. 10 பெண்கள் உட்பட 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,   

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 பேராக அதிகரித்திருப்பதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். முதலில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். முதலமைச்சரின் உத்தரவுப்படி அமைச்சர்கள் பலரும் கரூர் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

திருச்சியில் இருந்து  மெடிக்கல் டீம்

"கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருச்சியில் இருந்து Medical Team கரூர் செல்கிறது. அதேபோல் நானும் 9 மணி ரயிலில் கரூருக்கு செல்கிறேன்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்

துயரமான சூழலில் கரூர் அரசு மருத்துவமனை

தவெக தரப்பில் இருந்து எறத்தாழ 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதில்தான், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். பரப்புரை நடந்த இடத்தில் கூட்டம் கலைந்தபிறகே பலரும் கீழே மயக்கமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

திடலில் பல குழந்தைகள் காணாமல் போனதாக செய்திகள் வெளியான நிலையில், அக்குழந்தைகள் கீழே மயக்கமடைந்து கிடந்தது கூட்டம் கலைந்து சென்றபின் தான் தெரியவந்தது. துயரமான சூழலில் கரூர் அரசு மருத்துவமனை காட்சி அளிக்கிறது.

தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை

அரசு மருத்துவமனைகள் அன்றி, தனியார் மருத்துவமனையிலும் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து பலரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துவருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

"கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

29 பேர் உயிரிழப்பு

கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29பேர் உயிரிழப்பு என தகவல்.. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்தை உடனடியாக கரூர் செல்ல முதலமைச்சர் உத்தரவு. கரூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்திருக்கிறார்.

மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக காவல்துறை

முதற்கட்டமாக சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

33 பேர் உயிரிழப்பு

கரூர் விஜய் பரப்புரையில் சிக்கி 33 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து பிரேத பரிசோதனை அறைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதால் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.

நாளை காலை கரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீமான் இரங்கல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் உயிரிழந்தோருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

"கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்; காயமடைந்த அனைவரும் விரைந்து உடல் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" - பாமக தலைவர் அன்புமணி

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

"கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கே அனுமதிக்கப்பட்டாருக்கான உதவிகளை வழங்க பணித்துள்ளேன். மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்

மருத்துவமனை முன் ஏராளமானோர் குவிந்து வரும் நிலையில் காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்

திருச்சி திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்கு செல்ல தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். “அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வந்திருக்கிறார்கள். கூடுதலாக, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். தேவையான அளவுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு நாங்களே சென்றோம். அவர்களிடம் சொல்லிவிட்டே வந்திருக்கிறோம். கட்டணம் எதுவும் வாங்க வேண்டாம். அரசு பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம். குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் பணியில் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

மருத்துவத்துறை செயலர் நேரில் செல்லவும் தலைமை செயலாளர் உத்தரவு

பிரதமர் மோடி இரங்கல்

கரூர் உயிரிழப்பு சம்பவம் பெரும் துயரம் அளிக்கிறது : பிரதமர் மோடி

திமுக எம்பி கனிமொழி இரங்கல்

"கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், போர்க்கால அடிப்படையில் தேவையான உதவிகளைச் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" திமுக எம்பி கனிமொழி இரங்கல்..

தலைமை செயலகம் விரையும் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் விரைகிறார்.. தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் சற்று நேரத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் 

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்.

கரூர் துயரம் குறித்து கருத்து கூறாமல் புறப்பட்ட விஜய்

நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.

கரூர் சம்பவத்தால் மிகுந்த வருத்தம்: ராஜ்நாத் சிங்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நாளை கரூர் பயணம்

உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் - இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தவெக தலைவர் விஜய் கரூரில் பேசிக்கொண்டு இருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலபேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்த அரசு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்“ எனத் தெரிவித்தார்.

அன்பில் மகேஸ் மருத்துவமனை வருகை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்

பதிலளிக்காமல் சென்ற விஜய்

நெஞ்சு பதைக்கிறது - கமல்ஹாசன் எம்பி

"நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

இரவே கரூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செல்வப்பெருந்தகை இரங்கல்

"கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்

தனி விமானத்தில் கரூர் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னை திரும்புகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

"கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது

"தமிழகத்தின் கரூரில் நடிகரும், தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவருமான திரு. விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆரம்பகட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்பது மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்

கரூர் விஜய் பரப்புரை தள்ளுமுள்ளு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.. ஆண்கள் 11, பெண்கள் 17, குழந்தைகள் 8

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்

அமைச்சர் ரகுபதி கரூர் அரசு மருத்துவமனை வருகை

துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் - திரௌபதி முர்மு

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே சிலர் உயிரிழந்ததாக தகவல்

ராகுல் காந்தி இரங்கல்

"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கட்சிப் பரப்புரையில் நடந்த துயரச் சம்பவத்தில் பலர் உயிரிழந்தது குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

இந்த துயர தருணத்தில் காங்கிரஸ் கட்சி பணியாளர்கள் மற்றும் தலைவர்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி, அரசு அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" - மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி

அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - அமித் ஷா

முதலமைச்சர் மற்றும் ஆளுநரிடம் நிலவரத்தை கேட்டறிந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசுத் தரப்பில் இருந்து செய்யத் தயார் என்றும் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

மேலும் சிலர் கவலைக்கிடம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்

கரூர் கொடுந்துயரம்: திருமாவளவன் இரங்கல்

"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது.

அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" விசிக தலைவர் திருமாவளவன்

ஜிவி பிரகாஷ் இரங்கல்

"கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்" - இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்

"கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" - தமிழக அரசு

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்

"இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" - தவெக தலைவர் விஜய்

பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து - தமிழக பாஜக

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்து 25 மருத்துவர்கள், 25 செவிலியர்கள் கரூர் செல்கின்றனர்..

11 பேருக்கு தீவிர சிகிச்சை

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 46 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர் என்றும் அதில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

உதவி எண்கள் அறிவிப்பு

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களைத் தெரிந்துகொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 04324 256306, 7010806322

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com