\
CM vijay
CM vijayANI

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீட்.. விஜயின் மாஸ்டர் பிளான்.. இடைத்தேர்தல் கைகொடுக்குமா?

ஆளும் தவெகவை எதிர்த்து திமுக, அதிமுக களமிறங்க உள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதில் 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

அதேநேரத்தில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தனது வேட்பாளர்களை முதலில் அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். தவெக சார்பில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தவெக அக்கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் போட்டியிடுகின்றனர்.

CM vijay
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இதில் முக்கிய அம்சம் இருவரும் ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, மரகதம் குமரவேல் 2021 மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் அந்தத் தொகுதியில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு தவெகவுக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தாராபுரம் தொகுதியிலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றிருந்தார். இந்த இரு தொகுதிகளிலும், தற்போது அதிமுக பின்னணியைக் கொண்டவர்களையே தவெக வேட்பாளர்களாக அறிவித்திருப்பது தேர்தல் களத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

CM Vijay
CM VijayANI

அதேவேளையில், வெற்றி பெற்ற பின்னர் குறுகிய காலத்திலேயே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது வேட்பாளர்களுக்கு எதிராக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொகுதி மக்களின் மனநிலை, கட்சித் தொண்டர்களின் களப்பணி, உள்ளூர் அரசியல் கணக்குகள் என பல்வேறு அம்சங்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

CM vijay
2 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!!

மறுபுறம், திமுகவும் இந்த இரு தொகுதிகளிலும் வெற்றியைப் பெற தீவிரமாக களப்பணியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்த பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும். இதனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

MK Stalin
MK StalinANI

அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை தவெக வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வார்களா? ஆளும் கட்சி என்ற பலத்துடன் தவெக இடைத்தேர்தலிலும் வெற்றியைப் பதிவு செய்யுமா? திமுக தனது தேர்தல் வியூகத்தின் மூலம் ஆட்டத்தை மாற்றுமா? கடந்த தேர்தல்களைப் போல, அதிமுகவே இம்முறையும் ஆதிக்கம் செலுத்துமா என்பதை தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com