உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின் இட நெருக்கடி காரணமாக ராஜாஜி அரங்கிற்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சென்னை தீவுத்திடலுக்கு உடல் மாற்றப்பட்டது. தீவுத்திடலில் கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
மக்கள் வெள்ளத்தில் மிகவும் மெதுவாக விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஏராளமான மக்கள் வழிநெடுகிலும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் விஜய பிரபாகரன் மக்களது வெள்ளத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுத காட்சி காண்போரை கரையச் செய்தது.
கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு வரப்பட்டதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.
பின்னர் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தங்களது இறுதி சடங்குகளை செய்தனர். தேமுதிக அலுவலகத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் தங்களது செல்போன்களில் இருந்த டார்ச் லைட்டை அடித்து அஞ்சலியை செலுத்தினர்.
அவரது உடல் சந்தனப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் கேப்டன் கேப்டன் என்ற ஆரவாரத்தோடு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.