”மகனை முதல்வராக்குவதுதான் ஸ்டாலின் எண்ணம்..” மக்களுக்கு பழனிசாமி கோரிக்கை!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி ஊழல் காரணமாக கலைக்கப்பட்டதென குற்றம்சாட்டினார். கருணாநிதி குடும்பமே திமுகவில் அதிகாரம் பிடித்திருப்பதாகவும், ஸ்டாலின் மகன் உதயநிதியை முதல்வராக்கும் திட்டத்திலேயே ஈடுபட்டிருப்பதாகவும் கூறி, இந்தத் தேர்தலில் கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் அதிமுகவின் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
இந்தசூழலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை முடிவுசெய்து வெளியிட்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
உதயநிதியை முதல்வராக்கும் திட்டத்தில் ஸ்டாலின்..
மக்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிலேயே ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுகவினுடைய ஆட்சிதான். திமுக என்றால் ஊழல். அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா. கருணாநிதிக்கு பின்னால் ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்தார். ஆட்சியிலும் பதவிக்கு வந்தார். அதேபோல தற்போது ஸ்டாலினும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கினார், கட்சியிலும் பதவிக் கொண்டு வந்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி துணை பொதுச்செயலாளர் என கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள், கட்சியிலும் இருக்கிறார்கள் .
ஆனால் அதிமுகவில் ஜனநாயக ரீதியாக யார் வேண்டுமானாலும் பொறுப்பிற்கு வரலாம். ஜெயலலிதா அவர்கள் மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற பலரும் முயற்சி செய்தார்கள். திமுக பி--டீமை ஏற்படுத்தி அதிமுக கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கியது. அதிமுகவை உடைக்க பார்த்தது. இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது (ஓபிஎஸ்)” பேசினார்.
மேலும், ”நான் உங்களைப் போல் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான் எனக்கு உங்கள் முன் பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்திருக்கிறார். ஆனால் திமுகவில் அப்படி கிடையாது கருணாநிதி குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். இந்த தேர்தல் கருணாநிதி குடும்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். சாதாரண மக்களும் ஆட்சிக்கு வரவேண்டும். இந்த ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், ஸ்டாலின் மனைவி ஆகிய நான்கு பேரும் ஆட்சியை நடத்துகிறார்கள்.
ஸ்டாலினுக்கு அவரது மகன் உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். எப்படியாவது உதயநிதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அதனை மக்கள் அனுமதிக்க கூடாது. தேர்தல் கருணாநிதி குடும்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்று பேசினார்.

