தவெக பொதுக்கூட்டம்| துப்பாக்கியுடன் வந்த நபர் யார்..? வெளியான தகவல்!
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த நபர் பரபரப்பை ஏற்படுத்தினார். மெட்டல் டிடெக்டரில் சிக்கிய அவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.ஆர்.எஃப் வீரர் டேவிட் எனவும், தவெக நிர்வாகி பிரபுவின் பாதுகாவலர் எனவும் தெரியவந்தது. போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருவதால், தவெக தலைவர் விஜயின் பிரச்சார சுற்றுப்பயணம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தவெக தலைவர் விஜயின் ரோட்ஷோவிற்கு அனுமதி மறுத்த புதுச்சேரி காவல்துறை, பல்வேறு நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி கூட்டத்திற்கு புதுச்சேரியை சார்ந்தவர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கியூ ஆர் கோடு இடம்பெற்றுள்ள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே போலீசார் கூட்டத்திற்கு அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
துப்பாக்கியுடன் வந்த நபர் யார்..?
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியை கொண்டுவந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானத்திற்குள் நுழைபவர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தபோது துப்பாக்கியுடன் வந்த நபர் சிக்கினார். அவரை பிடித்து போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தசூழலில் துப்பாக்கியுடன் வந்தநபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும் அவர் சி.பி.ஆர்.எஃப் வீரர் என்பதும் தெரியவந்தது. மேலும் சிவகங்கை தவெக நிர்வாகி பிரபு என்பவரின் பாதுகாவலர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அந்நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

