\
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிபிக்பாஸ் நிகழ்ச்சி / ஜியோஹாட்ஸ்டார்

“எந்த நபரையும் குறிப்பிட்டு பேசவில்லை..” சமீபத்திய சர்ச்சை குறித்து விஜய்சேதுபதி விளக்கம்!

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதி, பொறுப்பு குறித்து பேசிய கருத்துகள் முதல்வர் விஜயை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையை கிளப்பியது.
Published on
Summary

பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு தலைமைத்துவம் குறித்து அறிவுரை கூறிய விஜய் சேதுபதியின் பேச்சு, முதல்வர் விஜயை குறித்ததாக சர்ச்சை கிளம்பியது. விஜய் ரசிகர்கள், தவெக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், பிக்பாஸ் மேடையில் பேசப்படும் கருத்துகள் போட்டியாளர்கள் மற்றும் குழுவினருக்கே உரியது, வெளியிலிருக்கும் எந்தவொரு நபரையோ அல்லது அமைப்புகளையோ குறிக்கவில்லை என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். இந்தசூழலில் சமீபத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவருக்கு அறிவுரை சொன்ன விஜய் சேதுபதி, “தலைவன் என்றால் என்னவென்றே தெரியாமல், தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல், வாய்க்கு வந்ததுபோல வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது, எதிரணி மீது பழியைத் தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது என்பது தலைவனுக்கான பண்பு இல்லை. அது ஏமாற்று வேலை” என பேசியிருந்தார்.

விஜய்சேதுபதியின் இந்த பேச்சு முதல்வர் விஜயை தாக்கிப்பேசியது போல இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. இதனால் விஜயின் ரசிகர்களும், தவெகவினரும் விஜய் சேதுபதியை சமூகவலைதளங்களில் கடுமையாக தாக்கி பதிவிட்டு விமர்சித்தனர்.

இந்தசம்பவம் நாளுக்கு நாள் தீவிரமாகி இயக்குநர் சீனு ராமசாமி, சீமான் மற்றும் தவெக அமைச்சர்கள் என பலரும் கருத்துகூற சினிமா, அரசியல் என பெரியதாகியது. இந்தநிலையில் தான், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசப்படும் கருத்துக்கும் வெளி நபருக்கும் சம்பந்தமில்லை என விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ள வீடியோ கிளிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்த மேடையில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானவை, வெளியில் இருக்கும் எந்த நபரையும் அல்லது அமைப்பையும் சார்ந்து குறிப்பிடப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதைப் பற்றி சொல்லாமலே உங்களுக்கெல்லாம் புரிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடந்த வாரமே இதை சொல்லியிருக்க வேண்டும். இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது” என பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com