டெல்லி | சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு.. தனிவிமானம் மூலம் சென்னை திரும்பினார் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தனிவிமானம் மூலம் சென்னை திரும்பினார். பொங்கல் பண்டிகைக்கு பின் விசாரணை தொடரும் என சிபிஐ தெரிவித்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தவகையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜனவரி 12 (நேற்று) ஆஜராக சிபிஐ தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணை 2 அல்லது 3 நாட்கள் வரை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் நாள் விசாரணை சுமார், 7 மணி நேரம் அளவிற்கு விஜயிடம் நடத்தப்பட்டது. அதில், அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்று மீண்டும் விசாரணக்கு அழைக்கப்பட்ட நிலையில், விஜய் தரப்பில் பொங்கல் பண்டிகைக்கு பின்பு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ இரண்டாம் கட்ட விசாரணையை ஒத்திவைத்திருக்கின்றனர்.
மேலும், ஜனவரி 19ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இன்று காலை 11 மணியளவில் தவெக தலைவர் விஜய் டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார்.

