செல்போன் அனுமதியில்லை - சென்னையில் தொடங்கியது விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனைக் கூட்டம்!
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு (IT Wing) ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. காலை 8.55 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 வரை நடக்க உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள தொகுதி வாரியாக (IT Wing) நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தொகுதிக்கு 3 பேர் ஐடி விங் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
குறிப்பாக, சமூக ஊடகங்களான டிவிட்டர் (எக்ஸ்), வாட்சப், பேஸ்புக் போன்றவைகளில் மக்கள் இயக்க நடவடிக்கைகளை எப்படி பதிவு செய்ய வேண்டும். எந்தெந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் போன்றவை குறித்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐடி விங் மட்டுமின்றி பிற அணி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்த கூட்டத்திற்கு வந்த நிர்வாகிகள் செல்போன் வைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செல்போனை வெளியில் வைத்துவிட்டு வந்த பிறகே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்ட நிலையில் இன்று ஐ.டி. விங் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்கு முன்பாக பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டி சான்றிதழ் வழங்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக காமராஜர் பிறந்த நாளில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க ஏதுவாக தளபதி பயிலகம் தொடங்கப்பட்டன.
இதனிடையே, செய்தியாளர்களிடையே பேசிய புஸ்ஸி ஆனந்த், “விஜய்யின் அறிவுறுத்தலின் படி ஐடி விங் கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. 3 லட்சம் பேர் ஐடி விங்கில் இருக்கிறார்கள். நல்ல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தக் கூட்டம் மூலமாக ஆலோசனை வழங்கப்படுகிறது” என்றார்.