இறைச்சிக்காக விலங்குகளை வெட்டினால்.. அதிரடி காட்டும் பாஜக புதிய அரசு!
மேற்கு வங்க பாஜக அரசு, 1950ஆம் ஆண்டின் விலங்குகள் இறைச்சி வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கு ஏற்றது என்பதற்கான அதிகாரபூர்வ சான்றிதழ் இன்றி எந்தவொரு கால்நடையையும் இறைச்சிக்காக வெட்டக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், 1950ஆம் ஆண்டின் மேற்கு வங்க விலங்குகள் இறைச்சி வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் திருத்தப்பட்ட பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, இறைச்சி வெட்டுவதற்கு ஏற்ற விலங்கு என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு கால்நடையையோ அல்லது எருமைகளையோ இறைச்சிக்காக வெட்டக் கூடாது. மேலும், எந்தவொரு திறந்தவெளி பொதுக்கூடங்களிலும் இறைச்சிக்காக வெட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டின் மேற்கு வங்க விலங்குகள் வதைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை,₹1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலத் தர நிலைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதையும், பொது சுகாதாரப் பாதுகாப்பைப் பேணுவதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து இறைச்சி வெட்டும் கூடங்களும் இந்தப் புதியவிதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டும், இல்லையெனில் அபராதங்களைச் சந்திக்க நேரிடும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
விலங்குகள் இறைச்சி வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், சட்டவிரோத நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் மாநிலம் அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

