ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன்.? விஜயிடம் கூறியது என்ன.? - ஆளுநர் தரப்பில் விளக்கம்!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், சட்டப்பேரவைத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் ஆதரவளிக்கப்போவதாக நேற்று தெரிவித்ததையடுத்து, தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது.
தொடர்ந்து, ஆட்சி அமைக்க இன்று 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கேட்டுவருகிறது. அந்தக் கட்சிகள் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கின்றன. எனினும், நேற்று தவெக முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகை சென்ற விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோரினார். எனினும், ஆளுநர் தரப்பில் இருந்து பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் பெயர் பட்டியலை கொடுத்த பிறகே ஆட்சி அமைக்க அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், பெரும்பான்மை இடங்களை பெற்ற கட்சியையே ஆட்சி அமைக்க ஆளுநர் கோர வேண்டும். அரசியலமைப்பின் படி, சட்டமன்றத்திலேயே பெரும்பான்மை நிரூபிக்க சொல்ல வேண்டும் என விசிக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியிருந்தனர். இந்தசூழலில் தான், இன்று தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்து பேசியிருக்கிறார். எனினும், ஆளுநர் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையி, இன்று தவெக தலைவர் விஜயிடம் விவாதிக்கப்பட்டது என்ன என்பது குறித்து, ஆளுநர் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், தவெக தலைவர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரில் அழைத்ததாகவும், இருவரின் சந்திப்பின்போது, ”தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை என்பதை ஆளுநர் விளக்கிக் கூறினார்” எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

