”இடதுசாரிகள் முடிவை பொறுத்தே விசிக முடிவு..” - திருமாவளவன்
தமிழகத்தில் தவெக பெரும்பான்மை எண் எட்டாததால், காங்கிரஸ் ஆதரவு வழங்கி அரசியல் சமநிலை மாறியிருக்கிறது. இதனால் பாஜக குழப்பம் ஏற்படுத்த முயல்கிறது என திருமாவளவன் குற்றம்சாட்டுகிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி அல்லது மறு தேர்தல் தேவையில்லை என்றும், கரூர் விவகாரத்தில் விஜயை பாஜக நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது எனவும் அவர் கூறி, இடதுசாரிகள் முடிவைத் தொடர்ந்து விசிக முடிவு எடுக்கும் என விளக்குகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், அவர்கள் ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாற்றுக் கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தற்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நடந்துமுடிந்த தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5இல் வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சிக்கு இன்னும் 6 இடங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையாக இருந்துவரும் சூழலில், விசிக மற்றும் இடதுசாரிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
இந்தசூழலில் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்கொடுத்துள்ளார்.
இடதுசாரிகள் முடிவை பொறுத்து விசிக முடிவு..
செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் திருமாவளவன், “விஜய் ஆதரவு கோரியது தொடர்பாக விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அரசமைப்பு சட்டப்படி ஆளுநர் இயங்க வேண்டும், தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழலுக்கு பாஜக முயற்சி செய்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவருவதோ, மறு தேர்தல் நடத்துவதோ தேவையில்லாதது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் ஆத்திரத்தில் பாஜக இவ்வாறு செய்கிறது என நினைக்கிறேன். காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் கரூர் விவகாரத்தில் விஜய்யை நெருக்க பாஜக திட்டமிடுகிறது. ஏதோ ஒரு வகையில் பாஜகவின் நெருக்கடிக்கு விஜய் ஆளாகிறார் என்பது தெரிகிறது. இடதுசாரிகள் என்ன முடிவை எடுக்கிறார்களோ அதைப்பொறுத்து விசிகவின் முடிவும்” என்று பேசியுள்ளார்.

