\
Vijay Govt Budget Allocation for TVK Poll Promises
CM VijayPTI

தவெக அரசின் முதல் பட்ஜெட்.. நிறைவேறுமா தேர்தல் வாக்குறுதிகள்? எவ்வளவு செலவாகும்?

தமிழக நிதி நெருக்கடிச் சூழலில், தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published on

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், கடன் சுமை அதிகரிப்பு, வருவாய்ப் பற்றாக்குறை உட்பட தற்போதைய தமிழக நிதி நெருக்கடிச் சூழலில், தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக அறிவித்த முக்கிய வாக்குறுதிகள், அவற்றுக்கு ஆகும் செலவு என்ன என்பதைப் பார்க்கலாம். தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு தோராயமாக 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசுx page

இது தமிழக அரசின் வருவாயில் 33 சதவீதம் ஆகும். மகளிருக்கான 'மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்' கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்குவதற்கு, ஆண்டுக்கு 47,100 கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமான ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்க 11,910 கோடி ரூபாயும், சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய 6,000 கோடி ரூபாயும் தேவைப்படுகிறது. ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் 'அன்னபூரணி திட்டத்துக்கு' 9,990 கோடி ரூபாயும், இளைஞர்களுக்கான 'வெற்றி திறன் பயிற்சித் திட்டத்திற்கு' 5,400 கோடி ரூபாயும் நிதி தேவைப்படுகிறது.

CM Vijay
CM VijayPTI

வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலையின்மை உதவித்தொகை திட்டத்துக்கு 4,800 கோடி ரூபாயும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் மானியச் சுமையாக 2,000 கோடி ரூபாயும் கணக்கிடப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 1 பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் 'அண்ணன் சீர் திட்டத்திற்கு' 1,500 கோடி ரூபாயும், குடும்பங்களுக்கான விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,274 கோடி ரூபாயும், மீனவர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 27,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு 545 கோடி ரூபாயும் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com