கரூர் துயரம் | காலை 11 மணிக்கு சிபிஐ விசாரணை., தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் விஜய்.!
2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் என். ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு நேரில் அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
2-ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு கடந்த, 6-ஆம் தேதி அன்று எழுத்துப்பூர்வ சம்மனை சிபிஐ அனுப்பியது. அதன்படி, விசாரணைக்காக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணைக்கு ஆஜரவாவதற்காக இன்று, காலை தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அவருடன், தவெக நிர்வாகிககள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரும் புறப்பட்டுச் சென்றனர். சிபிஐ விசாரணை இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, தவெக தலைவர் விஜய்க்கு டெல்லி பாதுக்காப்பு அளிக்கக் கோரி டெல்லி காவல்துறைக்கு தவெக தரப்பில் இருந்து நேற்று மனு அளித்திருந்த நிலையில், டெல்லி காவல்துறையும் விஜய்க்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

