director bharathirajasson manoj passes away political and film celebrities mourn
மனோஜ் பாரதிராஜாஎக்ஸ் தளம்

பெரும் அதிர்ச்சி! காலமானார் மனோஜ் பாரதிராஜா.. முதல்வர், இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல்!

இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி இன்று காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Published on

இதய பிரச்னை தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி இன்று காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோஜ் பாரதியின் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் ’தாஜ்மகால்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ’சமுத்திரம்’, ’அல்லி அர்ஜுனா’, ’வருஷமெல்லாம் வசந்தம்’ எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

director bharathirajasson manoj passes away political and film celebrities mourn
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், திரைப்பட நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா, இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மனோஜ் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது? எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்து இருக்க வேண்டாம்” என அதில் தெரிவித்துள்ளார்.

director bharathirajasson manoj passes away political and film celebrities mourn
மனோஜ் பாரதி திடீர் மரணம்.. என்ன காரணம்..? நடந்ததென்ன?

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, “இயக்குநர் இமயம் ஐயா பாரதிராஜாவின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான பாரதி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ஐயா பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமார், “தமிழ் இயக்குநரும், குடும்பத்தில் ஒருவர் என நெருக்கமான உறவாக இருக்கும் ’இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் அன்பு மகன் மனோஜ், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையளிக்கிறது. ‘சமுத்திரம்’ திரைப்படத்தில் மனோஜின் மூத்த சகோதரராக நடித்த நாட்களை நினைவுகூருகிறேன். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கான முத்திரை பதிக்க இறுதி வரை போராடிய இளவலின் மறைவு வாழ்வின் நிலையற்ற நிலையை காட்டுகிறது. பாரதிராஜா அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற எங்களிடம் வார்த்தைகளில்லை. சுற்றத்தார்க்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் பேரிழப்பை தந்து மறைந்திருக்கும் மனோஜின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

director bharathirajasson manoj passes away political and film celebrities mourn
”விஜயகாந்த் இறந்த செய்தியைக் காலையில் கேட்டவுடன் ஜீரணிக்கவே முடியவில்லை” - இயக்குநர் பாரதிராஜா

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தம்முடைய இரங்கல் செய்தியில், “கலை உலக வரலாற்றில் கிராமங்களையும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அற்புதமான காவியங்களாக படைத்துத் தந்த இயக்குநர் இமயம் சகோதரர் பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் இருதய சிகிச்சை செய்த நிலையிலேயே மறைந்துவிட்டார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தபோது, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மனோஜ் தான் நடித்த படங்களில் ஒரு முத்திரை பதித்திருந்தார். மீனவ குடும்பத்தில் பிறந்து இளைஞனானபோது அவர் காதல் வயப்பட்டதும், அதில் தோல்வியும், வேதனையும் அவரைத் தாக்கியதும், என அந்தப் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து திரையுலக வாழ்க்கையிலும் வெற்றிகள் பெற்று, தந்தையின் கனவுகளை நனவாக்க வேண்டிய நேரத்தில் அவர் இயற்கை எய்தியது கலை உலகத்துக்கு பெரிய இழப்பாகும்.

தான் படைத்த காவியங்களில் பார்ப்போரைக் கண்ணீர் விடச் செய்த சோக காவியங்களை எல்லாம் வெள்ளித் திரைக்குத் தந்து அழியாப் புகழைப் பெற்ற பாரதிராஜா அவர்களால் இந்த துக்கத்தைத் தாங்க முடியாது. காலம் ஆறுதலை உடனே தந்துவிடாது. அவரது துயரத்திலும், குடும்பத்தார் துயரத்திலும் நானும் பங்கேற்கிறேன்.

திரையுலக திருப்புமுனையான பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா அவர்கள் மரணமடைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். திரைத்துறையில் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தனது கடின உழைப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் திரு.மனோஜ் பாரதிராஜா அவர்கள்.

அன்னாரை இழந்து வாடும் அவரது தந்தை இயக்குனர் இமையம் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா. அவர்களின் மகன் திரு.மனோஜ் பாரதிராஜா. அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்கின்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

பல்வேறு திரைப்படங்களில் நாயகனாகவும்,குணச்சித்திர வேடங்களிலும் நடித்து திரைத்துறையில் பங்காற்றி வந்த திரு.மனோஜ். அவர்கள் இறப்பு திரைத்துறைக்கு பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் திரு. பாரதிராஜா, மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும், தமிழக வாழ்வுரிரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com