தவெக செயல்வீரர்கள் கூட்டம்.. சட்டப்பேரவை தேர்தலையொட்டி விஜய் முக்கிய ஆலோசனை.!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் கூட அவர், எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
இச்சூழலில் தான், சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பொதுச் சின்னமாக ”விசில்” சின்னத்தை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, கணக்குகளை தாக்கல் செய்ததால் பொதுச்சின்னம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தவெகவின் முதல் தேர்வான விசில் சின்னம் வழங்கப்பட்டதை, பொதுமக்களுக்கு விசில் மற்றும் இனிப்புகளை வழங்கி தவெகவினர் கொண்டாடினர்.
இந்நிலையில் இன்று, தவெக தலைவர் விஜய் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட விவகாரம் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் விஜய் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 1 மாதத்திற்கு பிறகு அரசியல் சார்ந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் இக்கூட்டம் இருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு 2000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தக் கூட்டம் நடைபெறும் நுழைவாயிலில் விசில் சின்னம் பொருத்திய பதாகைகள் வைத்து வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. 2026 முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றி கழகத்தின் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தலைப் பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

