வேலூர் | ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று சொந்த ஊருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவர்கள் தலையில் ரத்தப்போக்கு அதிகமாக உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரயிலில் குற்றங்களில் ஈடுபடுபவரின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டினர்.
அவர் கூறியதன் அடிப்படையில் கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.