என்ன புதுசா இருக்கு.! பாம்பை தோளில் போட்டபடி யாசகம் எடுத்த நபர்கள் - அலறியடித்து ஓடிய பொது மக்கள்!
செய்தியாளர்: ச.குமரவேல்
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி, ஆனால், இங்கு ஒருவர் பாம்பை தோளில் போட்டுக் கொண்டு பணம் வசூலிப்பது புதுமொழியாக உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 18- ம் தேதி இரவு 4 பேர் செய்த செயல் அங்கிருந்த பொது மக்களை பதறவைத்துள்ளது.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்த வந்த ஒரு பெண் உட்பட 4 பேர், கழுத்து மற்றும் தோளில் உயிருடன் உள்ள ஆளுயர பாம்பை வைத்துக்கொண்டு யாசகம் பெற்றுள்ளனர். இவர்கள் பாம்போடு வருவதைக் கண்ட பொதுமக்கள் பலர் பதற்றத்தில் அலறியடித்து ஓடியுள்ளனர்.. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து வனத் துறையினரிடம் கேட்ட போது... இது போன்று விலங்குகளை வைத்து யாசகம் பெறுவது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று கூறினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.