கோவை | பிடிக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக கடித்த பாம்பு.. பாம்புபிடி வீரர் சிகிச்சை பலனின்றி மரணம்
செய்தியாளர்: பிரவீண்
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை செய்து வந்தார். பல ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நுழைந்த கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி காலை தொண்டாமுத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நல்லபாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சந்தோஷ், அங்கிருந்த பாம்பை பிடிக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பாம்பு அவரை கடித்துள்ளது.
இதனால் மயக்கமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.