விஜய்க்கு துணிச்சல் இல்லை.. திமுகவுக்கும் அதற்கும் என்ன சம்மந்தம்! - திருமாவளவன் விமர்சனம்
விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திருமாவளவன் விஜயை விமர்சித்து, திமுகவுடன் தொடர்பு இல்லாமல் பாஜகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கேள்வி எழுப்பினார். விஜயின் துணிச்சல் பற்றியும் விமர்சித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையில் புதியதாக களம்கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சியும் முதல் மக்கள் தேர்தலுக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி மீண்டும் அரசியல் நகர்வில் தீவிரம் காட்டிவரும் தவெகவிற்கு, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தை ஒத்துக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தவெக தலைவர் விஜயின் விருப்பமான சின்னம் என்பதால் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்துவருகின்றனர்.
இந்தசூழலில் தான் தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
விஜய்க்கு துணிச்சல் இல்லை..
சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் திராவிட கழகம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜவிற்கு தேர்தல் நோக்கம், அரசியல் ஆதாயத்திற்காக திமுக அரசை விமர்சிக்கிறார்கள் அதற்கு எடப்பாடி துணை போகிறார. எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என ஜெயலலிதா சொன்னது எங்களுக்கு நியாபகம் உள்ளது, உங்களுக்கு நியாபகம் இல்லையா. ஒருமுறை பட்டுவிட்டோம் இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது, மோடியா இல்லை இந்த லேடியா என்று ஜெயலலிதா முழக்கமிட்டாரே மறந்துவிட்டீர்களா என விமர்சனம் செய்தார்.
மேலும் விஜய் குறித்து பேசிய அவர், ஜனநாயகன் படத்திற்கு தடை அதற்கும் திமுக தான் காரணம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க போவதாக விஜய் ஆட்டம் போடுகிறார். சென்சார் போர்டுக்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம், ஏன் பாஜகவை எதிர்த்து ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. இன்னும் தேர்தலுக்கே வரவில்லை அதற்குள் இப்படி பயந்தால் எதிர்காலத்தில் எப்படி அரசியல் செய்யபோகிறீர்கள்.. எதற்காக யாரை கண்டு அஞ்சுகிறீர்கள்... எதிர்க்கும் துணிச்சல் இல்லை என விமர்சனம் செய்தார்.

