
இதுகுறித்து திருமாவளவன் பேசுகையில், “பாஜக - அதிமுக விரிசல் என்பது ஒரு தற்காலிகமான அரசியல் நாடகம். கூட்டணியை ஒருபோதும் முறித்துக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவை நம்பிதான் பாஜக இருக்கிறது. பாஜகவை நம்பிதான் அதிமுக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் தனித்து நிற்பதற்கு வாய்ப்பில்லை. அண்ணாமலை கவனம் ஈர்ப்பதற்காக கண்டதை பேசுகிறார். ஆதாரமற்றதை எல்லாம் பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவையே கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார்.
இவை அனைத்தும் அரசியலில் தன்னை பற்றி ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும் என்கிற ஒரு உளவியல் சிக்கல் அவருக்கு இருக்கிறது. ஆகவே மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்த நிலையில் அதிமுகவில் ஜெயக்குமார் போன்றவர்கள் தமது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான் அதனால் கூட்டணி முறிந்து விடும் - உடைந்து விடும் என்று யாரும் எதிர்பார்க்கத் தேவையில்லை.
அதிமுக, பாஜகவை சுமக்காமல் தனித்து நின்றாலே அவர்களுக்கு எந்த பாதிப்பும் பின்னடைவும் ஏற்படாது. பாஜகவை சுமக்க சுமக்க வாக்கு வங்கியை மேலும் மேலும் இழக்க நேரிடும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என்ன சொன்னாலும் அதை அதிமுக பொருட்படுத்தவில்லை. பாஜகவை தூக்கி சுமப்பதே தங்களது கடமை என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இடைக்கால முரண்கள் விவாதங்கள் தமிழக அரசியல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டது என்பதற்கு இது ஒரு சான்று. அவர்களே இன்றைக்கு ஒப்புக்கொண்டு, தேர்வு எழுதி இருந்தால் போதும் தேர்ச்சி பெற தேவையில்லை என்று அறிவிக்கும் நிலைமை உள்ளது. ஒட்டு மொத்தமாக அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய இந்திய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது என்ற அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், உரிய ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் படிகளை ஏற வைக்கலாம்” என தெரிவித்தார்.