தமிழக அரசியலில் திருப்பம் | ”சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” - திருமாவளவன் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுவந்தது. ஆனாலும், 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி திமுக - விசிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, 8 தொகுதிகளுகான விசிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி வெளியிட்டார். ஏற்கனவே, திருமாவளவன் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்திருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்தது அரசியல் களத்தின் பேசுபொருளானது.
தொடர்ந்து, 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இதனால்தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என தெரிவித்திருந்தார். இதையடுத்து, பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் உலாவி வந்தன. தொடர்ந்து, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்தும், பல்வேறான கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் தான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தான் போட்டிடாமல் பின்வாங்கியதன் காரணம் குறித்து விளக்கியிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினராக 2 ஆண்டுகளை முடித்துள்ளேன்; இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இருப்பினும், என்னுடைய உள்ளுணர்வு சட்டப்பேரவையில் விளிம்பு நிலை மக்களுக்காக பேச வேண்டும் என 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறது. 2001-ல் மங்களூர் தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் இரண்டரை ஆண்டுகளில் ராஜினாமா செய்தேன். 2006-ல் அதிமுக கூட்டணியில் 10 தொகுதியில் போட்டியிட்டோம். அப்போது, நான் போட்டியிடுவதாக இருந்த மங்களூர் தொகுதியை செல்வப்பெருந்தகைக்காக விட்டுகொடுத்தேன். பதவியில் எனக்கு பிடிப்பில்லை என்பதற்கு இதுவே சான்று.
2026-ல் தேர்தல் களம் வெகுவாக மாறியிருக்கிறது. வலது சாரிகளின் கைகள் ஓங்கியிருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்கள். மதசார்பற்ற கூட்டணியை பலவீன படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்தனர். குறிப்பாக, விசிகவை குறிவைத்து காய்களை நகர்த்தினார்கள். ஆனாலும், நான் உறுதியாக திமுகவுடன் கூட்டணியை அமைத்திருக்கிறேன். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை 1990 களிலேயே நான் முன்வைத்த முழக்கமாக இருந்தாலும், கூட்டணியில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்க இந்த முறை அதை மறுதலித்திருகிறேன்.
அதேசமயம், நான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததுடன் ஆளாளுக்கு தங்கள் யூகங்களை செய்திகளாக்கி ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள். தொங்கு சட்டசபை அமையும் என்று திருமாவளவன் எண்ணுகிறார் என்றும் துணைமுதல்வராக ஆக வேண்டும் என்றும் ஆசையில் இருக்கிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள். கூட்டணியே பாதிக்கப்படும் அளவிற்கு கருத்து பரப்பப்படும் சூழலில் அதனை கவனிக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு யுத்தகளத்தில் முன்நோக்கி போவது போல பின்நோக்கி வருவதும் முக்கியமானது. அதேசமயம், இதை நான் பின்னோக்கி வருவதாக பார்க்கவில்லை; ஒரு யுக்தியாகவே பார்க்கிறேன். எனவே, நான் போட்டியிடுவதாக இருந்த காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளைய பெருமாள் மகன் ஜோதிமணி போட்டியிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
