"சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள்" - ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது முப்பெரும் விழாவின் நிறைவு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ராஜராஜனின் பூமியில் இளையராஜா நம்மைப் பக்தியில் மூழ்கடித்துவிட்டார். இளையராஜாவின் இசை ஓர் ஆன்மிக அனுபவம். இது, ராஜராஜ சோழனின் மண். காசியின் பிரதிநிதியான சிவகோஷம் புல்லரிப்பைத் தருகிறது. அரசு கண்காட்சியைப் பார்த்து வியந்துபோனேன். சோழர்கள் கண்காட்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை நீண்டிருந்தது சோழ அரசு.
சிவனை வணங்குபவன் சிவனிலேயே கரைந்து விடுகிறான். ராஜராஜன், ராஜேந்திரன் இரு பெயர்கள் பாரதத்தின் அடையாளம். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி. பிரிட்டிஷார் அல்ல; சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள். கங்கையின் மகத்துவத்தை உணர்ந்திருந்தவர் ராஜேந்திரன். இன்று உலகம் பேசும் நீர் மேலாண்மைக்கும் முன்னோடிகள் சோழர்கள். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழீஸ்வரம். காசியில் இருந்து கங்கை நீரைக் கொண்டுவந்தது எனக்குப் பெருமை. நான் காசியின் பிரதிநிதி; கங்கையின் மகன். காவிரிக் கரைக்கு கங்கைக் கரையில் இருந்து வந்துள்ளேன். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது. நடராஜரின் ஆனந்த தாண்டம் தத்துவங்களின் வெளிப்பாடு. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம். இன்றைய பாரதம் கடந்த வரலாற்றில் பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்தார்.