வாணியம்பாடி: தோல் தொழிற்சாலை உரிமையாளரின் செல்போனை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் கைது
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முரளி, இவர் அதே பகுதியில் தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த (26.12.2024) அன்று வாணியம்பாடிக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கிரிசமுத்திரம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டு இருந்துள்ளார்,
அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில், வந்த 3 இளைஞர்கள் முரளியின் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர், இதுகுறித்து முரளி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்களை தேடி வந்தனர்.
இதையடுத்து வாணியம்பாடி பாரத் நகர் பகுதியைச் சேர்ந்த புலி (எ) அப்துல்ரபிக் மற்றும் பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த அஜூஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.