\
Vanathi Srinivasan Criticises Vijay Over Silence on Chola Pride
விஜய் - வானதி சீனிவாசன்Pt web

"பிரதமரை பாராட்டவில்லை; இதுதான் நாகரிக அரசியலா?" - விஜய் குறித்து வானதி விமர்சனம்!

தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் ஒரு பாராட்டுகூட தெரிவிக்கவில்லை என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
Published on

இந்தியாவில் காலனித்துவ ஆட்சியின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள், சிற்பங்கள், கலைநயமிக்க பொருட்கள் பல்வேறு நாடுகளுக்குக் கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிரதமர் மோடி தற்போதைய நெதர்லாந்து பயணத்தின்போது, சோழர் காலத்து வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்கள்’ நெதர்லாந்து அரசால் இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மோடி
மோடிX

11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்செப்புப் பட்டயங்கள், முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்து நிர்வாக ஆவணங்களாகும். நாகப்பட்டினத்தில் இந்தோனேசிய மன்னரால் கட்டப்பட்ட சூடாமணி விஹார் என்ற பௌத்த மடாலயத்திற்குச் சோழ மன்னர்கள் நிலக்கொடை அளித்ததை இவை விவரிக்கின்றன. நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் மூன்று நூற்றாண்டுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்ட, 30 கிலோ எடையுள்ள இந்த 24 செப்புப் பட்டயங்கள், சோழர்களின் கடல்சார் வணிகம், சமய நல்லிணக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Vanathi Srinivasan Criticises Vijay Over Silence on Chola Pride
போர் பதற்றம் | UAE அணுமின் நிலையத்தை தாக்கிய ஈரான்!

எனினும், இந்த செப்புப் பட்டயங்கள் மீட்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் விஜய் இதுவரை பேசவில்லை. இந்தச் சூழலில்தான், சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா? இதுதான் உங்களது நாகரிக அரசியலா என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டுகூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க வேண்டும்.

விஜய்
விஜய்Pt web

ஒட்டுமொத்த தமிழகமும் பிரதமரைப் பாராட்டி உச்சி நுகர்ந்து கொண்டாடும் வேளையில், நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நீங்கள் இதுவரை பதிலாக, மெத்த மௌனத்தையே சாதித்திருக்கிறீர்கள். இது வெறும் மறதியல்ல; திட்டமிட்ட அலட்சியம் என்றே தோன்றுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் உங்களுக்கு, தமிழ்ப் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் வருகிறதா?

’மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த உங்களின் நடவடிக்கைகள் கடந்தகால திமுக ஆட்சியைவிட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை. தமிழர் வழிமரபில் வந்த நீங்கள், நமது தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும்போது அதற்குப் பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா? உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டு போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது. செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com