”தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.. மாணவர்கள் ஆதரவு அதிகமாக உள்ளது” - வைகோ
தமிழ்நாட்டில் பல தசாப்தங்களுக்கு பிறகு உருவான மும்முனை போட்டியில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முக்கிய சக்தியாக உயர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஆக்ஸிஸ் மை இந்தியா கணிப்பில் தவெக தனிப்பெரும்பான்மை பெறும் வாய்ப்பு கூறப்பட்ட நிலையில், வைகோ, மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் ஆதரவால் தவெக தேர்தல் முடிவில் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என வலியுறுத்துகிறார்.
தமிழ்நாடு அரசியல் களம் பல தசாப்தங்களுக்கு பிறகு வலுவான மும்முனை போட்டியை கண்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் விஜயை பார்க்க மட்டுமே கூட்டும் கூடுகிறது என்றும், அது பெரியதாக ஓட்டாக மாறாது என்றும் சொல்லப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் முடிவுக்கு முன்னால் வெளியான கருத்துக்கணிப்பு எல்லோரையும் கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்துள்ளது.
ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பின் படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 120 இடங்கள் வரை தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெறும் எனக் கணித்துள்ளது. இதை ரியாலிட்டி இல்லை என்று ஒதுக்கி விடமுடியாது என்று கூறும் அரசியல் கருத்தாளர்கள், விஜய் பெரும்பான்மை பெறலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக, தவெக என 3 கட்சிகளும் ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்துகணிப்பு வெளியாகியிருக்கும் சூழலில், மே 4ஆம் தேதி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் கருத்து கணிப்புக்கு பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ, தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் வைகோ, “தமிழ்நாட்டில் தவெக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளது. தேர்தல் முடிவுகளில் விஜயின் தவெக ஆச்சரியங்களை ஏற்படுத்தும். தவெகவுக்கு மாணவர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம் என்றும் அதை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

