"1994 ல் சென்னையில் நாங்கள் நடத்திய பேரணியில்.," - கரூர் நெரிசல் சம்பவத்தோடு ஒப்பிட்டு வைகோ பேட்டி!
”1994 ல் சென்னையில் நாங்கள் நடத்திய பேரணி கூட்டத்தில் உயிர் சேதம் நடந்துவிடக்கூடாது என்ற பயமிருந்தது.. அதனை கட்டுக்கோப்பாக நடத்தினோம்” என கரூர் சம்பவத்தோடு ஒப்பிட்டு வைகோ பேசியிருக்கிறார்.
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பித்துவிட்டது. விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினைத் தொடங்கி தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கரூரில் 7 மணி நேரம் கூட்டம் காத்திருந்தது குறித்து அவருக்கு சொல்லி இருப்பார்கள். கூட்ட நெரிசலில் விபரீதம் நடந்து விடும் என்று யூகித்து. அவர், சரியான முறையில் கையாண்டிருக்கலாம். தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிய அந்தப் பதட்டத்தில் சென்னை சென்று விட்டார். ஆனலும், அவர் திருச்சியில் விடுதி எடுத்து தங்கியிருந்து ஒரு நாள் கழித்து கூட உயிர் பலியான குடும்பத்தினருக்கு நேரடியாக சென்று அவர், இரங்கல்களை தெரிவித்திருக்கலாம்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 1994 ல் சென்னையில் நாங்கள் நடத்திய பேரணி கூட்டத்தில் உயிர் சேதம் நடந்துவிடக்கூடாது என்ற பயமிருந்தது.. அதனை கட்டுக்கோப்பாக நடத்தினோம் . லட்சக்கணக்கான தொண்டர்களை பாதுகாக்க 3000 தொண்டர் படைகளை உருவாக்கினோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், கரூர் விவகாரத்தில், 7 மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் பொதுமக்கள் குழந்தைகள் கீழே மயங்கி விழுந்துள்ளனர். ஆதவ் அர்ஜுன், ஆனந்த் ஆகியோர் இது நடந்திருக்காமல் பார்த்திருக்கலாம். அதிக கூட்டம் கூடும் இடங்களில் குழந்தைகளை கொண்டு போகாமல் தாய்மார்கள் தவிர்த்திருக்கலாம். கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் மூலம், ஆறாத காயம் ஏற்பட்டுள்ளது. கருரில் இறந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதை அடுத்து இதுபோன்று இனிமேல் நடக்கும் கூட்டத்திற்கு பாதுகாப்பு முன்னேற்பாடு செய்ய வேண்டும்” எனவும் பேசியுள்ளார்.

