”பெற்றோரின் விருப்பதை நிறைவேற்றியுள்ளோம்” - UPSC-ல் தேர்ச்சி பெற்றவரின் சகோதரரான ராணுவ வீரர் பேட்டி
செய்தியாளர்: ஆனந்தன்
இன்று UPSC 2024 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில், மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், உபி-யைச் சேர்ந்த சக்தி துபே என்பவர் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் அகில இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில் சிவச்சந்திரனின் சகோதரரும் ராணுவ வீரருமான ராமச்சந்திரன் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசும்போது... ”எனது அண்ணன் சிவச்சந்திரன் தொடர்ந்து மூன்று முறை தேர்வில் பங்கேற்றார். இறுதியாக இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 23வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், “எனது அண்ணன் இலக்கு நிர்ணயம் செய்து தொடர்ந்து அவர் முன்னெடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி. எங்களது பெற்றோர்கள், நாங்கள் இருவரும் நாட்டின் சேவைக்கு வர வேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படி நான் ராணுவ வீரராகவும், எனது அண்ணன் UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 23வது இடம் பிடித்து நாட்டின் சேவைக்கு வந்துள்ளார்.
நானும் எனது அண்ணனும் கலந்துரையாடும் போது, நான் முதல்வன் என்ற திட்டம் பெரும் உதவியாக உள்ளதாக அண்ணன் தெரிவித்தார். பெற்றோர்கள் அண்ணனுக்கும் எனக்கும் பெரும் உதவியாக இருந்ததன் காரணமாகவே இந்த இலக்கை அடைய முடிந்தது” என்று சிவச்சந்திரனின் சகோதரர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
”பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம், லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை மகிழ்ச்சியாகி உள்ளது UPSC தேர்வில் நான் முதல்வன் திட்ட மாணவர் தமிழ்நாட்டு வரிசையில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.