விழுப்புரம்: தொடரும் திரௌபதி அம்மன் கோயில் சீல்... மேல்பாதி கிராமத்தில் முடிவுக்கு வராத வன்முறை!

மேல்பாதி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
melpathy
melpathypt web

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஜூன் மாதம் காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்தனர்.

melpathy
விழுப்புரம்: பட்டியலின மக்களை அனுமதிக்காத திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் சீல்!

இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட சமாதான பேச்சு வார்த்தைகள் விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலையில் எந்த ஒரு சுமூக தீர்வும் எட்டபடவில்லை. இதனை அடுத்து இரு தரப்பினரை சேர்ந்த 83 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலும் பூட்டப்பட்ட நிலை தொடரும் நிலையில் மேல்பாதி கிராமத்தில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு கோலியனூர் கூட்டு சாலை உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரை மேல்பாதி கிராமத்தில் மற்றொரு தரப்பினர் தாக்கி சென்றுள்ளனர். கலியமூர்த்தி வளவனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மேல்பாதி ஊர் பகுதியினைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க கோரி மேல்பாதி கிராம ஊர் மக்கள் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங் சாய் தலைமையில் பாதுகாப்பு கவசங்களுடன் மேல்பாதி கிராமத்தில் அதிரடியாக குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றதால் கிராம மக்கள் மற்றும் காவல் துறையிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு ஊர் மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மேல்பாதி கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com