
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது உளுந்தூர்பேட்டை பகுதியில் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
"பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அணிகளான ED CBI, 95 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு மகாராஷ்டிராவில் பாஜக என்னென்ன கூத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். தேசியவாத காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக அதன் தலைவர்களில் ஒருவரான அஜித் பவாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கு மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. இவர்களெல்லாம் தற்போது பாஜகவின் பக்கம் வந்து விட்டார்கள், பாஜகவின் பக்கம் வந்த பிறகு இவர்கள் எல்லாம் புனிதர்களாக மாறிவிட்டார்கள். இப்போது அவர்கள் வீட்டில் எந்த சோதனையும் கிடையாது.
பாஜக அரசு ED CBIஐ வைத்து அதிமுகவை வேண்டுமானால் பணிய வைக்கலாம் ஆனால் திமுக கட்சியை சேர்ந்த கிளை செயலாளரைக் கூட உங்களால் பணிய வைக்க முடியாது. நான் மோடிக்கும் பயபடமாட்டேன் EDக்கும் பயப்படமாட்டேன்" என உதயநிதி பேசியுள்ளார்.