ஓனர்களுக்கும் அடிமைகளுக்குமான கூட்டணி., அதிமுக - பாஜக குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.!
சென்னை புளியந்தோப்பு பகுதியில், இன்று ”அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா -2025” என்ற நிகழ்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் ஆவடி நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் சேகர் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர். ஆனால், அவர் ரம்ஜானை சிறப்பாக கொண்டடுவார். கிறிஸ்துமஸ் விழாவை அதை விட சிறப்பாக கொண்டாடுவார். எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கும் அரசு தான் திராவிட மாடல் அரசு, இதை முதல்வர் எப்போதும் சொல்வார். மகளிர் விடியல் பயணம் மூலம் 850 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். இன்று கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடியே 30 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தி வருவதால்தான் இந்தியாவின் அதிக வளர்ச்சி அடையும் மாநிலமாக மாறியுள்ளது. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ளாமல் தான் பல தொல்லைகளை தருகின்றனர். இந்து திணிப்பு, குல கல்வி திட்டத்தை திணிக்க பார்க்கின்றனர்.
எஸ்.ஐ.ஆர் அபாயம் குறித்து முதலில் பேசியவர் முதல்வர் தான். தலித் மற்றும் இசுலாமியர் வாக்குகளை நீக்கத் தான் இதை கொண்டு வந்தனர் எனப் பேசினார். அப்படி, தற்போது தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்குகளை நீக்கியுள்ளனர். ஒவ்வொருவரும் உங்கள் வாக்குகள் உள்ளதா? என பார்க்க வேண்டும். இதை நான் கோரிக்கையாக வைக்கிறேன். அப்படி வாக்கு இல்லை என்றால் மீண்டும் பதிவு செய்யுங்கள். இதை நாம் செய்ய வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர் அது என்றுமே வெற்றி பெறாது. அதற்கு காரணம் முதல்வர் உருவாக்கியுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. இது வெறும் தேர்தல் கால கூட்டணி இல்லை என மக்களுக்கு தெரியும். அதிமுக கூட்டணி சந்தர்பவாத கூட்டணி என்று கூட சொல்ல முடியாது. அது ஓனர்களுக்கும் அடிமைகளுக்குமான கூட்டணியாக மாறி வருகிறது” என தெரிவித்தார்.

