'என்னை அப்படி வளர்க்கவில்லை.. மனைவி, மகளுடன் வாழ்பவன் நான்’ - உதயநிதி ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரை சர்ச்சையாக மாறி, உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து தஞ்சை போலீஸார் சென்னையில் கைது செய்தனர். செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் 1 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், பெண்களை தாழ்த்திப் பேசவில்லை, இரட்டை அர்த்தம் இல்லை என விளக்கம் அளித்தார்.
காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தஞ்சை போலீஸார் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்த தஞ்சைக்கு அழைத்துச்சென்ற காவல்துறையினர், திமுகவினர் அதிகளவில் திரண்டதால் செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட 1 மணி நேரத்திற்கும் மேலான விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எந்தவொரு தவறான எண்ணத்திலும் நேற்று நான் பேசவில்லை. பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என எண்ணம் எனக்கு துளியும் இல்லை
என்னுடைய பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை; திருமணமாகி எனக்கு ஒரு மனைவி இருக்காங்க. அவங்க கூட தான் நான் இருக்கேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க. எனக்கு ஒரு தங்கை இருக்காங்க, எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு டைவர்ட் செய்துள்ளது. நான் பேசாததை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய் பரப்புரை மேற்கொள்கின்றனர்” என பேசினார்.
