\
Udhayanidhi Stalin Arrest Issue Supporters and Opposition
Udhyanidhi Stalin ANI

சர்ச்சைப் பேச்சு | உதயநிதி ஸ்டாலின் கைது.. ஆதரவும் எதிர்ப்பும்!

காவிரி ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்; M.மீரா

தஞ்சையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சென்னை மேயர் பிரியா கண்டனம்

`திமுக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யும் அளவிற்கு நாங்கள் என்ன தீவிரவாதியா? தியேட்டருக்கு சென்று ’ஜனநாயகன்’ படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால், இன்று ரத்தம் வரும் அளவுக்கு போலீசை வைத்து அடித்திருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? போலீஸை உங்கள் கையில் வைத்திருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? இந்த அராஜக அரசியலை கண்டு ஒருபோதும் நாங்கள் அஞ்ச மாட்டோம்’’ என சென்னை மேயர் பிரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

கனிமொழி எம்.பி கண்டனம்

”அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு

”எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பு செய்தியாகி இருக்கிறது. தேமுதிகவை பொறுத்தவரை, நானும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், உதயநிதி ஸ்டாலினை இந்த அளவுக்கு துரிதமாக கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன..? அவர் தவறாகவே பேசியிருந்தாலும், அவர் மீது வழக்கு போடுங்கள்.

Prema Latha vijayakanth
Prema Latha vijayakanth ANi

வானதி சீனிவாசன் ஆதரவு

”இனி, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் இது தக்க பாடம். பெண்களை அவதூறாக பேசுபவர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடுமின்றி கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கையை வரவேற்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார்

”ஜெயலலிதா இருந்திருந்தால் இதையேதான் செய்திருப்பார்” என்று கூறியுள்ளார்.

Nirmal kumar
Nirmal kumar ANI

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்தp பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்

”உதயநிதி பேச்சு ஏற்புடையதல்ல. இரட்டைப் பொருள் தரும் வகையில் அவர் பேசியிருக்கக்கூடாது. பெண்ணை இழிவாகப் பேசும் முறை சரியானதல்ல. அதேநேரத்தில் கைது நடவடிக்கையைத் தவிர்த்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Rajmohan
Rajmohan ANI

அமைச்சர் ராஜ்மோகன்

”அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர், தற்போது வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கைச் சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin Arrest Issue Supporters and Opposition
உதயநிதி ஸ்டாலின் கைது.. களத்தில் குதித்த திமுகவினர்.. உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com