அடேங்கப்பா..! ஒரே மாதத்தில் 30 வாகனங்களா.. 200 டூவீலர்களை திருடிய கொள்ளையன் - சிக்கியது எப்படி?
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சேக் மொஹமது என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சூளைமேடு ரயில் நிலைய அருகே நிறுத்தி வைத்திருந்த பேஷன் ப்ரோ இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது. இதுதொடர்பாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், இதேபோல சென்னையில் சூளைமேடு உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக புகார்கள் குவிந்துள்ளது.
உடனடியாக சூளைமேடு போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து திருநெல்வேலி ஏர்வாடியை சேர்ந்த முக்கிய நபரான ரசூல் மைதீன்(54) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்த பிரசாந்த்(31) மற்றும் புதுப்பேட்டையில் ஸ்கிராப் கடை வைத்துள்ள இதயத்துல்லா(34) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரசூல் மைதீன் கடந்த 10 வருடத்திற்கு மேலாக 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை தமிழகம் முழுவதும் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரசூல், பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்த பின்பு அவரது அண்ணனும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனால், பம்பாய்க்கு சென்று சிறிது காலம் வளையல் செய்யும் தொழில் ரசூல் செய்து, அதன் பின்பாக சென்னை சூளைமேடு, தாம்பரத்தில் கார் ஓட்டி வந்துள்ளார்.
பின்னர், வருமானம் போதுமானதாக இல்லாததால் கடந்த 10 வருடங்களாக ரசூல் பைக் திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதும், பைக் திருடி கோவை, வேலூர், திருச்சி, மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ரயில் மூலமாக ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி, ரயில் நிலையங்களுக்கு அருகே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பல நாட்களாக சாலையில் நிறுத்தி வைத்துள்ள இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடுவதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிலும் பேஷன் ப்ரோ மற்றும் ஸ்பிளண்டர் பிளஸ் ஆகிய பைக்குகள் மட்டுமே முதல் குறி எனவும் அந்த பைக் மட்டுமே பழசானால் என்ன சாவி போட்டாலும் எளிதாக திறக்கலாம் எனவும் ரசூல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த 32 வண்டிகள் திருடியதாகவும் ரசூல் வாக்குமூலம் அளித்துள்ளார். திருடிய வாகனத்தை ரசூல் விற்பனை செய்ய ஆன்லைனில் தேடிய போது பெங்களூருவை சேர்ந்த ஸ்கிராப் நிறுவன உரிமையாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வாகனத்தை விற்பனை செய்து தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருடிய வாகனத்தை சென்னை புதுப்பேட்டையில் ஸ்கிராப் கடை வைத்திருக்கும் இதயதுல்லா என்பவர் உடைத்து ஸ்கிராப்பாக மாற்றி பெங்களூருக்கு அனுப்பி வந்துள்ளார். ரசூல் திருடப்படும் ஒரு வாகனத்தை விற்பனை செய்தால் 5000 முதல் 6000 ரூபாய் வரை கிடைக்கும் எனவும் ஒரு தடவை இரண்டு, மூன்று வண்டிகளை திருடி விட்டு அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை வைத்து பெங்களூருக்கு சென்று மது, மாது என உல்லாசமாக இருப்பதை ரசூல் வாடிக்கையாக வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே பாணியில், சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த சூளைமேடு போலீசார், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஸ்கிராப் ஆக மாற்றி அவர் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.