பைக் திருடர்கள்
பைக் திருடர்கள்புதியதலைமுறை

வாணியம்பாடி: இருசக்கர வாகன கொள்ளையர்கள் கைது; 14 வாகனங்கள் மீட்பு

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்து அதை வெளிமாநிலங்களில் விற்பனை செய்து வந்த இருவர் கைது.
Published on

வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்து அதை வெளிமாநிலங்களில் விற்பனை செய்து வந்த இருவர் கைது.  அவர்களிடம் இருந்து 14 இருசக்கர வாகனங்களை வாணியம்பாடி நகர காவல்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, காவலூர், ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் கொள்ளைப் போவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், வாணியம்பாடி நகர காவல்துறையினர், இன்று அம்பூர்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மேல்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் மாதகடப்பா பகுதியை சேர்ந்த திருப்பதி என்பது தெரியவந்தது. இருவரும், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை கொள்ளையடித்துச் சென்று, அதை ஆந்திர மாநிலத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடனடியாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com