தரங்கம்பாடி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு - அரசு பேருந்து தற்காலிக ஒட்டுநர் கைது
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள படகு தயாரிக்கும் நிறுவத்தில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் பனையூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் பெயண்டராக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், சந்தோஷ் குமார், சங்கர் ஆகிய இருவரும் கடந்த 22 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சென்றுவிட்டு தரங்கம்பாடி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மயிலாடுதுறை மாவட்ட எல்லையான நண்டலாறு சோதனைச் சாவடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொறையார் போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்தியது சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து என்பதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து பொறையார் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமான பேருந்தை ஓட்டிச் சென்ற தற்காலிக ஓட்டுநர் பிரவீன்குமாரை கைது செய்த பொறையார் போலிசார் அரசு பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.