கோவில்பட்டி: மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிக் கொலை - மர்ம கும்பலை தேடும் போலீசார்!
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50). இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி நேற்று இரவும் வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி ஆகிய இருவரையும் வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து இரு உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மேலும் மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.