\
cm vijay - udhayanidhi
cm vijay - udhayanidhiani

தவெக Vs திமுக.. மிசா விவகாரத்தைக் கையில் எடுத்த IT WINGS.. ஜெயித்தது யார்?

சட்டமன்றத்தில், மானியத் துறைகளின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது அவர் பேசிய விதமும், அவரது உடல்மொழியும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளது.
Published on

செய்தியாளர் : ராஜ்குமார்.ர

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசியபோது, தாடையில் கைவைத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மிசா சட்டத்தின் கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, சிறையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதில் அவரது தாடைப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை குறிப்பிட்டே விஜய் அந்த சைகையை செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் விஜயின் உடல்மொழிக்கும் பேச்சுக்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்
முக ஸ்டாலின் / முதல்வர் விஜய்mk stalin

இதையடுத்து, முதல்வர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தாம் எதேச்சையாக செய்த ஒரு செயலை வேண்டுமென்றே செய்ததாக சித்தரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு, மிசா விவகாரம் குறித்து பேசியதுடன், விஜய்க்கும் சில அறிவுரைகளை வழங்கியிருந்தார் . ஸ்டாலின் வெளியிட்ட இந்த வீடியோவை விமர்சிக்கும் வகையில், தவெக ஐடி விங் சார்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

அந்தப் பதிவில், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை. உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது” என விமர்சித்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக ஐடி விங் சார்பில் பதில் பதிவு வெளியிடப்பட்டது. அதில், “தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, டூப் வைத்து சண்டை போட்டவர்களுக்கு சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? மிசா தியாகம் என்பது பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!” என பதிவிட்டிருந்தனர்.

மேலும், இந்தப் பதிவுடன் தொடர்புடைய சில புகைப்படங்களையும் திமுக ஐடி விங் தரப்பில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், மிசா விவகாரத்தை மையமாக வைத்து தவெக மற்றும் திமுக ஐடி விங்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com