தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன? காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..
மதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் தவெக மாநாட்டுக்கு வரும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம் குறித்தும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக மாநாட்டு திடலில் உள்ள பார்க்கிங் 1க்கு வர வேண்டும். தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக பார்க்கிங் ஒன்றை வந்தடைய வேண்டும்.
ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பார்த்திபனூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக பார்க்கிங் ஒன்றுக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டையில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக பார்க்கிங் ஒன்றை வந்தடைய வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து வரும் வாகனங்கள், திண்டுக்கல், நாகமலைபுதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம் வழியாக பார்க்கிங் 1ஏஐ வந்தடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம் வழியாக பார்க்கிங் 1ஏக்கு வர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் வடமாவட்டங்களான விழுப்புரம், வேலூரில் இருந்து வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூர், அருப்புக்கோட்டை சந்திப்பு வழியாக பார்க்கிங் 2 மற்றும் 3ஐ வந்தடைய வேண்டும்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி செல்லும் பொதுமக்களுக்கான வாகனங்கள், ராமநாதபுரம் ரிங்ரோட்டில் இருந்து திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். அல்லது கப்பலூர் பாலம், திருமங்கலம், காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.