உத்திரமேரூர் | அரசுப் பள்ளியில் இடையூறு.. தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு செய்வது தொடர்பான காணொளிகள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து,எதிர்க்கட்சிகள் இது மக்கள் பணியா அல்லது போட்டோ ஷூட்டா என விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில், எத்தகைய அரசுப் பதவிகளில் இல்லாத தவெக உறுப்பினர்கள் சிலரும் கட்சித் துண்டு அணிந்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் சென்று ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தான், சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் 20-க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று வகுப்பறையில் முதல்வர் விஜயின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்தசூழலில் தான், வகுப்பறையில் சென்று மாணவர்களில் கல்விக்கு இடையூறு விளைவித்ததாக கூறி உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷை கட்சியை விட்டு நீக்கி அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ. ராஜேஷ் கழகத்தின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார். எனவே கழக நிர்வாகிகளும், தோழர்களும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வுண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
