’கல்வியை தொடரவும், முடிக்கவும் தாய்மை தடையாக கூடாது..’ மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!
மதுரை அமர்வு, கர்ப்பம், பிரசவம், குழந்தை பராமரிப்பு காரணமாக காலக்கெடு தாண்டிய LLM மாணவி சங்கீதாவுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க அனுமதி வழங்க உத்தரவிட்டது. தாய்மை கல்வியை தொடரவும் முடிக்கவும் தடையாக இருக்கக்கூடாது, யுஜிசி வழிகாட்டுதலின்படி மகப்பேறு சலுகைகள் வழங்கப்பட வேண்டும், கல்வி விதிகள் இரக்கம், நியாயம், உணர்வுபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
செய்தியாளர் - சகாய பிரதீபா
படித்து முடித்து பொருளாதார தன்னிறைவு பெற ஒரு பெண் முயற்சிக்கும் காலகட்டத்தில், பெரும் தடையாக இருப்பவற்றில் தாய்மையும் ஒன்று. இதைப் பேசுவதால் தாய்மையை குறைத்தோ, தவறாகவோ பேசுவதாகவோ எண்ணக் கூடாது. கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். ஒரு பெண்ணை வேலைக்கு எடுக்கும்போது அந்த நிறுவனம் யோசிக்கும் விஷயங்களில் இளம்பெண்ணாக இருந்தால், திருமணம், பிரசவம் என அடுத்தடுத்து விடுப்புகள் அளிக்க நேரிடும் என்பதும் ஒன்று. இதை மறுக்க முடியுமா? இரவுப்பணி செய்பவர்களாக இருக்க வேண்டும். கூடுதல் நேரம் பணிபுரிபவராக இருக்க வேண்டும் என்று தொடங்கி பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு தயங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தத் தடைகளை கடந்துதான் பெண்கள் வெவ்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், முக்கியமான உத்தரவு ஒன்றை மதுரை அமர்வு அளித்துள்ளது.
கர்ப்பம், பிரசவம், குழந்தை பராமரிப்பு காரணமாக, LLM படிப்பில் ஆய்வு கட்டுரையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க இயலாததால் தற்போது ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க அனுமதி கோரி மாணவி தொடர்ந்த வழக்கில், தாய்மை கல்வியை தொடரவும், முடிக்கவும் தடையாக மாறக்கூடாது என்பதே அடிப்படை நோக்கம் என்று மதுரை அமர்வு கூறியுள்ளது.
சட்டக் கல்லூரி மாணவி சங்கீதா, LLM படிப்பிற்கான ஆய்வு கட்டுரை கட்டணத்தை செலுத்தவும், ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கவும், வாய்மொழி தேர்வில் பங்கேற்கவும் அவற்றை வெற்றிகரமாக முடித்த பின் பட்டப்படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழை வழங்கவும் உத்தரவிடக்கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கௌடன், "மனுதாரர் 2019-20ம் கல்வியாண்டில் LLM படிப்பில் சேர்ந்த நிலையில், வருகைப் குறைவாக இருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. ஆகவே 2020-21 ஆம் கல்வி ஆண்டில் மீண்டும் சேர்க்கப்பட்டு, அனைத்து கோட்பாட்டுத் தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். அவற்றை முடித்திருந்த போதிலும் பாடத்திட்டத்தின் கட்டாய அங்கமான ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க முடியவில்லை. 2024 மார்ச் மாதத்தில் கருவுற்ற அவர் 2024 டிசம்பர் 7ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கர்ப்பம், பிரசவம் மற்றும் பிறந்த குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு காரணமாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்க முடியவில்லை என்பதால் கட்டணத்தை செலுத்தி ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க அனுமதி வழங்குமாறு மே 21ஆம் தேதி மனு அளித்துள்ளார். அவரது கோரிக்கைக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்படாததால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், "யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் பல்கலைக்கழகம் "N+2" விதியை பின்பற்றுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி LLM படிப்பில் சேர்ந்த மாணவர் 4 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்திருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாண்டி ஆய்வு கட்டுரையை ஏற்க எந்த விதியும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தரநிலைகள், தகுதி, நிபந்தனைகள் மற்றும் ஒரு மாணவர் படிப்பை முடிக்க வேண்டிய கால வரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பல்கலைக்கழகத்திற்கு இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. பொதுவாக கல்வி விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிடாது. இருப்பினும் அது நியாயம் அற்றதாகவோ அல்லது வெளிப்படையான அநீதி ஏற்படுத்துவதாகவோ இருந்தால் நீதிமன்றம் தலையிடலாம். மாணவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட உயிரியல் மற்றும் சமூக சூழ்நிலைகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் கல்வி விதிமுறைகளை பயன்படுத்த இயலாது.
மனுதாரர் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அனைத்து கோட்பாட்டு தேர்வுகளையும் முடித்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. LLM பட்டம் பெற அவருக்கு தேவையானது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, வாய்மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே. எனவே அவர் எந்த கல்வி தேவையில் இருந்தும் விலக்கு கோரவில்லை. மாறாக படிப்பின் இறுதி கட்டத்தை முடிக்க ஒரு வாய்ப்பையே கோருகின்றார்.
மனுதாரர் 2024 மார்ச் மாதத்தில் கருவுற்றதும் டிசம்பர் 7ஆம் தேதி குழந்தையை பெற்றெடுத்ததும் மருத்துவ ஆவணங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முந்தைய காலமும், பிந்தைய காலமும் உடல், மனம் மற்றும் மருத்துவ ரீதியாக முக்கியமான காலகட்டம். கர்ப்பமாக இருந்து, புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்கும் ஒரு பெண்ணை சாதாரண மாணவருடன் ஒப்பிட முடியாது.
அதோடு 2021 டிசம்பர் 14ஆம் தேதி பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்ட அறிவிப்பில், "பெண் மாணவிகளுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு தொடர்பான சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும், தேவையான இடங்களில் கால அவகாசம், நீட்டிப்பு மற்றும் வசதிகளை வழங்கும் வகையில் பொருத்தமான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு கர்ப்பம் மற்றும் தாய்மை காரணமாக பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படக்கூடாது என்ற முக்கியமான பொதுக் கொள்கையின் பிரதிபலிப்பாகவே உள்ளது.
பெண்களின் வாழ்க்கையில் கர்ப்பமும், தாய்மையும் இயற்கையான முக்கியமான கட்டங்கள். அவை கல்வி தேவைகளை நிறைவேற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என நீதிமன்ற தீர்ப்புகளும் குறிப்பிடுகின்றன. கல்வி நிறுவனங்கள் இத்தகைய வழக்குகளை கையாளும்போது கடுமையான அல்லது இயந்திரத்தனமான அணுகு முறையை பின்பற்ற முடியாது. அதற்கு பதிலாக இரக்கம், நியாயம் மற்றும் உணர்வு பூர்வமான அணுகுமுறையுடன் செயல்பட்டு, இயன்றவரை வசதிகளை வழங்க வேண்டும். கர்ப்பம், பிரசவம் அல்லது பிரசவத்திற்கு பிந்திய பொறுப்புகள் காரணமாக மட்டும் ஒரு மாணவி தனது கல்வி வாய்ப்புகளை இழக்கக்கூடாது. எனவே கல்வி விதிமுறைகளும் கல்வி நிறுவனங்களும் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான சிரமங்களை சமநிலைப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தாய்மை கல்வியை தொடரவும், முடிக்கவும் தடையாக மாறக்கூடாது என்பதே அடிப்படை நோக்கம்.
இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவான பல நியாயமான விஷயங்கள் உள்ளன. ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க அனுமதி வழங்குவது கல்வி தரநிலையை எந்த வகையிலும் பாதிக்காது. எனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் மதுரை சட்டக் கல்லூரியின் முதல்வர் இணையவழி கட்டணத்தை செலுத்த வேண்டும் என வற்புறுத்தாமல் நேரடியாக ஆய்வுக் கட்டுரை கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க வேண்டும், கட்டணம் செலுத்தப்பட்டவுடன், மனுதாரர் சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரையை பெற்றுக்கொண்டு ஏற்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிகள் படி, ஆய்வுக் கட்டுரையை மதிப்பீடு செய்து 2026 ஜூன் மாதத்தில் நடைபெறும் வாய்மொழி தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மனுதாரர் அனைத்து கல்வி தேவைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தால் LLM படிப்பை முடித்ததற்கான சான்றிதழை வழங்க வேண்டும். இந்த உத்தரவு மனுதாரர் காலவரம்பிற்குள் அனைத்து கோட்பாட்டு தேர்வுகளையும் வெற்றிகரமாக முடிந்திருந்ததையும், அதன் பின்னர் ஏற்பட்ட கர்ப்பம், பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பையும் கருத்தில் கொண்டு, இந்த வழக்கின் தனிப்பட்ட சூழலின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது பிற வழக்குகளுக்கு பொருந்தாது" என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

