திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் அருண்ராஜ்., மறுத்த தவெக தரப்பு.!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூத்த தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தவெக கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அவரை அறிமுகப்படுத்தவே தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தவெக மாநில நிர்வாகி செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் காலையிலிருந்தே தகவல் கூறப்பட்டு வந்தது.
மேலும், கடந்த சில மாதங்களாகவே தமிழக வெற்றி கழகம் தனது வேட்பாளர் தேர்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணி இன்னும் முழுமையடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது . ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் திருச்செங்கோடு நிகழ்வின் மூலம் இந்த அறிமுகம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில்தான், அருண்ராஜ் திருச்செங்கோட்டில் நடந்த இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படுவார் என்ற தகவலை மறுத்து தவெகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் மட்டுமே அறிவிப்பார். தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல் முறைப்படி தலைவர் விஜய் அவர்களால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இக்கூட்டத்தில் பேசியியிருந்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”தவெக தலைவர் விஜய் ஆலோசனைப் படி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதிகளிலும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர் குறித்து தவெக தலைவர் விஜய் மட்டுமே அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார். வருகின்ற 18-ம் தேதி ஈரோட்டில் தலைவர் வர உள்ளார்; திருச்செங்கோடு தொகுதியை தலைவர் விஜயின் கோட்டையாக மாற்றுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

