சேலத்தில் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக தவெக போராட்டம்
சேலத்தில் செயல்பட்டு வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றக்கோரி 12 நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் நடத்த தவெகவினர் திட்டமிட்ட நிலையில், போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொழிலாளர்களுக்கு ஆதரவாக சேலம் கோட்டை மைதானத்தில் தவெக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
2021ம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, போராடும் தொழிலாளர்களை வஞ்சிக்காதே என அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘என்ன ஆயிற்று.. என்ன ஆயிற்று.. தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று’ என்ற வாசகங்களோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பேசிய மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கொடுத்த வாக்குறுதிப்படி, ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.