எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்... ஆனந்த் மற்றும் ஆதவ் பங்கேற்பு!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்த்து, தவெக சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் சிவானந்தம் சாலையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டனர்.
பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை நவம்பர் 4 ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்திவரும் நிலையில், திமுக மற்று அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்.ஐ. ஆர் தொடர்பாக நவம்பர்-2 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், தவெக-விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தவெக அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்திருந்தது. ஆனாலும், தவெக முதலில் இருந்தே எஸ்.ஐ.ஆர்-க்கான எதிர் நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் நேற்று, எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? ஓட்டு போட முடியாத நிலை வந்தாலும் வரலாம். இதற்கு காரணம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் தான்” எனப் பேசியிருந்தார். தொடர்ந்து, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 16 (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல வேண்டுமென தவெக தலைமையில் இருந்து அறிவிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, தவெக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று எஸ்.ஐ.ஆர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை சிவானந்தம் சாலையில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டு வருகின்றன.

