
புகழ்மிக்க லண்டன் தேம்ஸ் நதியில், இந்தியர் ஒருவர் கால்களை சுத்தம் செய்ததாக பரவிய வீடியோ இணையத்தில் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றில், இந்தியர் போன்ற உருவத்தோற்றம் உள்ள ஒருவர் லண்டன் தேம்ஸ் நதியில் தனது கால்களை சுத்தம் செய்தது போல் இடம்பெற்றிருந்தது.
இதனை பார்த்த வெளிநாட்டவர் பலரும், ஏன் இதுபோன்ற செயல்களில் இந்தியர்கள் ஈடுபடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பவே, பதிலுக்கு இந்தியர்களும் தங்களது விளக்கங்களை வழங்கி வருகின்றனர். குறிப்பாக இந்த செயலை செய்த நபர் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கையைச் சேர்ந்தவராகக்கூட இருக்கலாம் எனவும், இதே செயலை வெள்ளை இனத்தவர் செய்தால் பிரச்சினை இல்லையா? எனவும் விவாதம் நீண்டுகிண்டே செல்கிறது
நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோஹ்ரான் மம்தானி, ஸ்டார்பக்ஸ் கடைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு நியாயமான ஒப்பந்தம் கிடைக்கும் வரை ஸ்டார்பக்ஸில் காபி வாங்க வேண்டாம் என்று அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள், நியாயமான ஊதியம் கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஒப்பந்தம் இல்லை என்றால் காபி இல்லை என்ற வாசகத்துடன் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் ஸ்டார்ட்பக்ஸ் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று நியூயார்க் மேயர் மம்தானி கூறியிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
கிளாடியா புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால், இங்கிலாந்தின் மோன்மவுத் நகர் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையாலும், மோன்னோ நதியின் கரைகள் உடைந்ததாலும், அந்நகரின் சாலைகளில் ஆறுபோல் தண்ணீர் ஓடியது. வீடுகள் மற்றும் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை படகுகளில் சென்று மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். இருப்பினும், மோன்மவுத் நகரை உள்ளடக்கிய தென்கிழக்கு வேல்ஸ்க்கு, தீவிர வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும், வெள்ளத்தின் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இப்புயல் காரணமாக போர்ச்சுகலிலும், மூவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 வீரர்கள் தங்களுடன் 4 எலிகளையும் அழைத்து வந்தனர். 2வார கால சீன விண்வெளி நிலையத்தில் மிகுந்த பாதுகாப்புடன் இந்த எலிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 2 வாரங்களில் எலிகளின் உடல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆய்வு செய்யப்படும். விண்வெளி கலனில் எலிகளின் செயல்பாடுகளும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்வெளியிலும் பூமியிலும் அவற்றின் உடலுக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வெளிப்புற செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சில கட்டட்டங்கள் இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நீதிமன்றம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக டிம் குக் இருந்து வருகிறார். இந்தசூழலில் அவர் பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய சி.இ.ஓ.-வை தேர்வு செய்யும் வேலைகளில் ஆப்பிள் நிறுவனத் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக செயல்பட்டு வரும் ஜான் டெர்னஸ் அடுத்தாண்டு சி.இ.ஓ.வாக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வால் அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுமார் 200 பொருட்களுக்கான இறக்குமதி வரி விதிப்பை நீக்கியுள்ளார். காஃபி, மாட்டிறைச்சி, வாழைப்பழம், ஆரஞ்சு பழரசம் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்காவிற்கு இனி வரியின்றி ஏற்றுமதி செய்ய முடியும். முன்னதாக இறக்குமதி வரி அதிகரிப்புக்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பில்லை என ட்ரம்ப் கூறி வந்தார். இறக்குமதி வரி விதிப்பு மக்களை பாதிப்பதை ட்ரம்ப்பே தற்போது ஒப்புக்கொண்டதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி கூறியுள்ளது
தி ஒடிஸி திரைப்படத்தை படமாக்க 20 லட்சம் அடி ஃபிலிமை பயன்படுத்தியதாக, இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார். படத்தின் பெரும்பகுதி கடலில் படமாக்கப்பட்டதாகவும், கடல் பயணங்கள் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை படமாக்க விரும்பியதாகவும், அவர் கூறியுள்ளார். தி ஒடிஸி திரைப்படம், முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராக்களாலேயே படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேட் டேமன், டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஆன் ஹேத்வே உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், அடுத்தாண்டு ஜூலை 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர் இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஸ்வீடன் காவல்துறை தெரிவித்துள்ளது. இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும், இது அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.