விஜய் சுட்டிக்காட்டிய பேச்சு.. 1967,1977 தேர்தல்களில் அண்ணா, எம்.ஜி.ஆர்-க்கு நடந்தது என்ன?
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், ”1967, 1977 சட்டப்பேரவை தேர்தல்களைப்போல 2026 சட்டப்பேரவை தேர்தலும் தமிழகத்தில் புரட்சிக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், அந்த இரு தேர்தல்களிலும் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்வோம்.
1967 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலில் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய தேர்தலாக பார்க்கப்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சென்னை ராஜதானியில் தமிழகம் இடம் பெற்றிருந்தது. அப்போதிருந்தே காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் என காங்கிரஸ் முதலமைச்சர்கள் அடுத்தடுத்து ஆட்சி புரிந்து வந்தனர்.
1967இல் நடைபெற்ற தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுக வெற்றிபெற்று காங்கிரஸின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. திமுக 137 இடங்களில் வென்றநிலையில் காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே வென்றது. அதற்கு பின் இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை. திராவிடக்கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் திருப்புமுனைத் தேர்தலாக 1967இல் நடைபெற்ற தேர்தல் பார்க்கப்படுகிறது.
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி எம்ஜிஆர் சந்தித்த முதல் பொதுத் தேர்தல் 1977இல் நடைபெற்றது. அதில் கருணாநிதி தலைமையிலான திமுக, எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, காங்கிரஸ், ஜனதா என 4 முனை போட்டி நடைபெற்றது. அதிமுக 130 இடங்களிலும் திமுக 48 இடங்களிலும் காங்கிரஸ் 27 இடங்களிலும் ஜனதா 10 இடங்களிலும் வென்றன. அதற்கு பின், அதிமுகவும் திமுகவுமே தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி புரிந்துவருகின்றன.