தொடங்கியது தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா|விஜய் போட்ட கையெழுத்து!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, பூஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில், நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த விழா, காலை 10 மணி முதல் பகல் ஒருமணி வரை
நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் 8 மணிக்கு முன்பாகவே அரங்கத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது, நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு தொலைபேசி எடுத்துவர வேண்டாம் என்றும் கட்சியின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமை உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனத் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் வருகை தந்துள்ளார். இவரும் நிகழ்ச்சியில் உரையாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, "வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு #GetOut" என தவெக விழாவில் வைக்கப்பட்டுள்ள பேனரில் முதலில் விஜய் கையெழுத்திட்டார். இவரை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
பேனரில், ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்பிற்கு எதிராக போராட உறுதியேற்போம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது; தவெக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பரப்புரை மேடையாக இதை விஜய் மாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது, கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் 90% முடிவடைந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் விஜயின் மக்களை நோக்கிய பயணம் குறித்தும் அவர் பேசுவார் எனக் கூறப்படுகிறது.