கீழடி விவகாரம் | ”தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது" மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய தவெக!
பழந்தமிழரின் வரலாற்றை விளக்கும் கீழடி குறித்த விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா தயாரித்தார். 2014ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வில் நவீன கருவிகள் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு கிடைக்கப் பெற்ற விவரங்களைக் கொண்டு 982 பக்க அறிக்கை உருவாக்கப்பட்டது. இதில் கார்பன் டேட்டிங் சோதனை மூலம் கீழடியில் கிமு 200ஆம் ஆண்டில் மனித வாழ்க்கை இருந்தது தெரியவந்தது. இந்த அறிக்கை 2023ஆம் ஆண்டு தொல்லியல் துறை இயக்குநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணனின் இந்தக் கீழடி ஆய்வறிக்கையை, இந்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது. அதில் சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களைச் செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியது. இது, தமிழகத்தில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாகப் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து தமிழக அரசும், தலைவர்களும் விமர்சித்தனர்.
இதையடுத்து, “கீழடி குறித்து கூடுதல் தரவுகளைக் கேட்டால் மத்திய அரசுக்கு ஆதரவளிக்க தமிழக அரசு ஏன் தயங்குகிறது” என மீண்டும் அமைச்சர் கஜேந்திர சிங் கேள்வி எழுப்பினார். இது, மேலும் தமிழகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கீழடியை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணா மாற்றப்பட்டார். இதனால், இவ்விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், “மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காக பாஜக சொல்லும் புராணக் கதைகள் அல்ல கீழடி ஆய்வு முடிவுகள். இது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது. தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது. கீழடி விவகாரத்தில் வீணாகக் கைவைக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.