அறிவியல்பூர்வ ஆதாரம் தேவை.. கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!
கீழடி குறித்த அமர்நாத்தின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், தமிழின் தொன்மை நாகரிகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். அதேநேரத்தில் அறிவியல்பூர்வமாக இன்னும் அதிக முடிவுகள் தேவை என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பி அனுப்பியது ஏன்?
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் குறித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 11 ஆண்டுகால சாதனைகளை குறித்து விரிவாக பேசிய அவரிடம், கீழடி ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
தமிழரின் தொன்மை மீதான தாக்குதல் இது..
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து பேசிய வரலாற்று பேராசிரியர் மாறப்பன், தமிழரின் தொன்மை மற்றும் தமிழ் மொழியின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார். அனைத்து அறிவியல் பூர்வ ஆய்வுகளையும் வெளியிடும் டெக்கான் பல்கலைக்கழகம் அளித்த தரவுகளும், அமெரிக்காவின் புளோரிடாவில் பீட்டா ஆய்வு முடிவுகளும் தவறானவையா எனக் கேள்வி எழுப்பினார்.
கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாத நிலையில், 2 ஆண்டுகளுக்குப்பிறகு அண்மையில் சில கேள்விகளை எழுப்பி கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருத்தி எழுத உத்தரவு பிறப்பித்திருந்தது.
கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது என குறிப்பிட்டு இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதிய அமர்நாத், ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை எனவும், அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு.800-கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.