”தவெக எங்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறது” - பரபரப்பை கிளப்பிய கிரிஷ் சோடங்கர்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 39 இடங்களை கேட்பதாக கூறப்படும் நிலையில், திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 25 தொகுதிகளை தர முன்வந்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து பொதுவெளிகளில் தெரிவித்து வந்தனர். இதன்காரணமாக, காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் அவ்வப்போது மாறிமாறி விமர்சித்து வந்தனர். அதேசமயம், தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற குரல்களும் காங்கிரஸில் எழ ஆரம்பித்தது.
இந்தச் சூழலில், சமீபத்தில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், அதிகாரப் பகிர்வு போன்ற கருத்துகள் அவரவரின் தனிப்பட்ட கருத்துதான் என்றும் காங்கிரஸின் கருத்து கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அதிகாரப் பகிர்வு குறித்தான குரல் குறைய ஆரம்பித்தன. இன்று தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். இது மீண்டும் சர்ச்சைய ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் பேட்டியில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே தலைவர்களின் உயர்மட்ட வருகைகள் நடந்துள்ளன. உண்மையில் என்ன நடக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சோடங்கர், ”இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. எங்கள் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்தார்’’ என கூறினார். பஞ்சாயத்து மட்டத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும், மாநகராட்சிகளிலும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் திமுகவுடன் விவாதிக்கப்படுவதாவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, ”காங்கிரஸ் மாநில அளவில் அதிகாரப் பங்கைப் பெற முயற்சிக்கிறதா” என்ற கேள்விக்கு, ”எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஓர் அரசியல் கட்சியை நடத்துகிறோம், ஓர் அரசு சாரா நிறுவனத்தை அல்ல. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன” என கூறியுள்ளார்.
’’விஜய்யின் கட்சியுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதாக ஊகங்கள் உள்ளன. தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்ததா’’ எனும் கேள்விக்கு ”தவெக எங்களுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது, அவர்கள் அடிமட்ட அளவில் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர். இப்போது, நாங்கள் திமுக தலைமையிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் கூட்டணிக் குழுவை அமைத்துள்ளனர், நாங்கள் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அரசியலில், நீங்கள் எல்லோரிடமும் பேச வேண்டும். தொடர்பு ஒருபோதும் நிற்காது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள். அதிமுக தலைவர்கள்கூட, நாங்கள் விழாக்களில் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்கிறோம்’’ என தெரிவித்தது கவனத்தை பெற்றுள்ளது.

