\
TVK ministers  declaring on every stage that Vijay will be the next PM
Vijay as Next PMTN ministers

விஜய்தான் அடுத்த பிரதமர்.. திட்டமிட்டு வேலை செய்கிறதா TVK? கலக்கத்தில் காங்கிரஸ்!

தமிழ்நாடு முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேடை தோறும் கூறி வருவது காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களை கைப்பற்றியது. பின்னர் காங்கிரஸ், விசிக, IUML, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சியைப் பிடித்தது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயை முன்னிறுத்தி இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் செய்திகள் மற்றும் ரீல்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதோடு தமிழ்நாட்டின் செயல்படுத்தப்படாத திட்டங்களை கூட, விஜய் செயல்படுத்துகிறார் என்றும், விஜய் பிரதமரானால் நாடு முன்னேறும் என்றும் வட மாநிலங்களில் தீவிர பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தச் சூழலில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும் ஒரு பாரத பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர் முதல்வர் விஜயை குறிப்பிட்டே அப்படிச் சொன்னதாக பல்வேறு அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.

அதனை உண்மை என உறுதிப்படுத்தும் விதமாக தவெக அமைச்சர்கள், MLA-கள் ஆகியோர் விஜய் இந்தியாவின் பிரதமராவார் என வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, இன்றைய CM.. வருங்கால PM.. இந்த இலக்கை நோக்கி பயணிப்போம்.. விஜய்தான் வருங்கால பிரதமர் என வெளிப்படையாகவே பேசினார்.

அதே போல மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான செங்கோட்டையனும், தமிழகத்தை மட்டும் அல்ல, எதிர்காலத்தில் இந்தியாவையே ஆளும் சக்தி படைத்தவர் நமது தலைவர் என விஜயை குறிப்பிட்டு கூறியுள்ளார். மேலும் தற்போதைய தமிழ்நாடு முதல்வர், நாளை அந்த டெல்லி கூட அவருதா இருக்கலாம் என அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

இதற்கிடையே புதுச்சேரி தவெக எம்எல்ஏக்கள் சாய் ஜெ. சரவணன்குமார், ராமு ஆகியோர், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை தவெக தலைவர் விஜய் நடத்திக்கொண்டிருக்கிறார். அதனை இந்தியா முழுவதும் விரும்புகின்றனர் என்றும், எனவே, வரும் காலத்தில் தமிழக முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என மக்கள் நினைக்கின்றனர் என்றும் கூறியிருந்தனர். மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா,ஆகியோரும் விஜய்தான் அடுத்த பிரதமர் என்றும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இதன் காரணமாக விஜயை பிரதமராகும் வகையில்தான் தவெக செயல்பட்டு வருகிறது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தவெகவின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

TVK ministers  declaring on every stage that Vijay will be the next PM
'அமித்ஷா கதையை முடித்து இருப்பார்,, தவெக MP-யே இல்லாத கட்சி' - மாணிக்கம் தாகூர் கருத்தால் சர்ச்சை !
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com